4223. சந்தின் அடையின் படலை
      வேதிகை தடம்தோறு,
அந்தி இடு அகில் புகை
      நுழைந்த, குளிர் அன்னம்;
மந்தி துயில் உற்ற, முழை;
      வன் கடுவன், அங்கத்து
இந்தியம் அவித்த தனி
      யோகியின் இருந்த.

     குளிர் அன்னம் - (மழை மிகுதியால்) குளிரால் நடுங்கிய அன்னங்கள்;
சந்தின் அடையின் படலை -
சந்தன மர இலைகளால் வேயப் பெற்றுச்
சாலைகளில் (இருந்த); வேதிகை - மேடைகளில் அமைந்த; தடம் தோறு -
ஓம குண்டங்கள் தோறும்; அந்தி இடு - காலை, மாலைச் சந்திக் காலங்களில்
(முனிவர்கள்) இட்டு எரிக்கின்ற; அகில் புகை நுழைந்த - அகிற் புகையில்
புகுந்து குளிர் காய்ந்தன; மந்தி - பெண்குரங்குகள்; முழை துயில் உற்ற -
மலைக்குகைகளில் படுத்து உறங்கின; வன் கடுவன் - வலிமையுடைய ஆண்
குரங்குகள்; அங்கத்து - (யோக அட்டாங்கங்களுள் ஒன்றான பிரித்தியாகாரம்
என்னும்) அங்கத்தினால்; இந்தியம் அவித்த - ஐந்துபொறிகளை அடக்கிய;
தனி யோகியின் இருந்த -
ஒப்பற்ற யோகியர் போல் (குளிரால்) ஒடுங்கி
இருந்தன.

     சந்தன மர இலைகளால் வேய்ந்த கூரையும், அகிற்புகையும் மலைவளச்
சிறப்பைக் குறித்தன.  வேதிகை - மேடை; தடம் - ஓமகுண்டம்; இது 'தடவு'
என்றும் வழங்கப்படும்.  அந்தி என்பது இரவு பகலுடன் இணையும் மாலைச்
சந்திக்கும், பகல் இரவுடன் சேரும் காலைச் சந்திக்கும் பொதுவாகும் யோகி -
இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரித்தியாகாரம், தாரணை, தியானம்,
சமாதி என்னும் எட்டு அங்கங்களுடன் யோகம் செய்பவன் பெருமழையில்
குளிரால் ஒடுங்கி நிற்கும் குரங்குகளுக்கு ஐம்பொறிகளை அடக்கி மனத்தை
ஒரு நிலைப்படுத்தி நிற்கும் யோகி உவமை.  சலிக்கும் மனத்திற்குக் குரங்கு
உவமை. அக்குரங்கே அசையாது இருத்தலை எண்ணங்களை அகற்றி ஒரு
நிலைப்பட்ட மனத்தையுடைய யோகிக்கு உவமை. கடுவன் மந்தியைப் பிரிந்து
தனித்து இருத்தல் இப்பாடலில் கருதத்தக்கது. மந்தியைப்போல் குகையில்
சென்று உறங்காமல், ஆண் குரங்குகள் மழையில் நின்ற செயல், அவை
துன்பம் கண்டு துவளாதவை என்பதையும் துன்பத்தைத் தாங்கி எதிர்
கொள்ளும் ஆற்றல் கொண்டவை என்பதையும் உணர்த்தி நின்றது.  இதனால்,
பின்னர் இராவணனுடன் ஏற்படும் போரில் ஏற்றபடையாகக் குரங்குப்படை
விளங்கும் என்பது குறிப்பால் பெறப்படுகிறது.  குறும்பு மிக்ககுரங்குகளும்
யோகிபோல் ஒடுங்கின என்பதால் மழைக் குளிரிச்சியின் கடுமை
பெறப்பட்டது.                                                 76