4225. கருந் தகைய, தண் சினைய,
      கைதை மடல், காதல்
தரும் தகைய போது
      கிளையில் புடை தயங்க,
பெருந் தகைய பொற் சிறை
      ஒடுக்கி, உடல் பேராது,
இருந்த, குருகின் பெடை -
      பிரிந்தவர்கள் என்ன.

     கருந்தகைய - கரிய நிறமுள்ள; தண் சினைய கைதை மடல் -
குளிர்ந்த கிளைகளை உடைய தாழை மடல்களின் இடையே; காதல் தரும்
தகைய போது -
காண்பார்க்கு விருப்பம் விளைக்கும் தன்மையன
வாய்த்தோன்றும் தாழை அரும்புகள்; கிளையின் புடை தயங்க - (ஆறுதல்
கூறும்) சுற்றத்தாரைப்போலப் பக்கங்களில் சூழ்ந்து விளங்க; குருகின் பெடை
-
பெண் நாரைகள்; பெருந்தகைய பொன் சிறை ஒடுக்கி - பெருமைக்குரிய
அழகிய சிறகுகளை ஒடுக்கி்க் கொண்டு; உடல் பேராது - இடம் விட்டுப்
பெயராமல்; பிரிந்தவர்கள் என்ன - தலைவரைப் பிரிந்த தலைவியரைப்
போல; இருந்து - இருந்தன.

     மழைக்காலத்தில் தாழை மிகுதியாகப் பூத்தல் இயல்பாகும்.  காமத்தை
மிகுவிக்கும் மலர்களுள் ஒன்றாகத்  தாழை மலர் கருதப்படுவவால் 'காதல்
தரும் தகைய போது' என்றார். இம்மலர் மன்மதனின் வாளாயுதம் என்பர்.
தலைவரைப் பிரிந்த தலைவியர்போலப் பெருமழையால் ஒடுங்கியிருக்கும்
பெண்நாரைகளைச் சுற்றி மலர்ந்திருக்கும் தாழை அரும்புகள் அவற்றின் சுற்றம்
போலக் காணப்பட்டன.  தாழை அருமபுகள் நாரையைப் போன்ற
தோற்றத்தனவாதலின் சுற்றமாகக் கூறப்பட்டன.  தாழை அரும்புகள் குருகுகள்
போல் இருத்தலை ''கருங்கால் குருகின் கோளுய்ந்து போகிய முடிங்குபுற
இறவின் மோவாயேற்றை. . . . தோடுபொதி தாழை வண்டுபடு வான்போது
வெறூஉம்'', (நற்றிணை - 211), 'அருகு கைதை மலரக் கெண்டை
குருகென்றஞ்சும்' (பெரியதிருமொழி 5-2-9) என்பவற்றால் அறியலாம்.
பிரிந்திருக்கும் தலைவியரைச் சுற்றத்தினர் தேற்றுவதும் தலைவியர் ஆற்றாது
வருந்துவதும் இயல்பாகும்.  'வருதல் தலைவர் வாய்வது நீ நின், பருவரல்
எவ்வம் களை மாயோயெனக்  காட்டவும் காட்டவும் காணாள் கலுழ் சிறந்து,
பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப'' (முல்லைப் பாட்டு - 20 - 23)
என்பது காண்க.  'குருகு' பால் பகா அஃறிணைப் பெயராதலின் 'இருந்த'
என்ற பன்மை முடிபுகொண்டது.                                78