4227.விளக்கு ஒளி அகில் புகை
      விழுங்கு அமளி, மென் கொம்பு
இளைக்கும் இடை மங்கையரும்,
      மைந்தர்களும், ஏற;
தளத் தகு மலர்த் தவிசு
      இகந்து, நகு சந்தின்
துளைத் துயில் உவந்து,
      துயில்வுற்ற, குளிர் தும்பி.

     மென் கொம்பு - மெல்லிய பூங்கொம்பும்; இளைக்கும் -
(மென்மையால் ஒப்பாகாது) தோற்கும்; இடை மங்கையரும் - இடையை
உடைய இளைய மங்கையரும்; மைந்தர்களும் - ஆடவர்களும்; அகில் புகை
-
அகிற்கட்டைகளின் புகையானது; விளக்கு ஒளி விழுங்கு - விளக்குகளின்
ஒளியை மறைக்கின்ற; அமளி ஏற - கட்டிலில் ஏற; குளிர் தும்பி - குளிரால்
வருந்திய வண்டுகள்; தளத்தகு மலர்த்தவிசு இகந்து - இதழ்கள் பொருந்திய
சிறந்த தாமரை மலராகிய படுக்கையை விட்டு; நகு சந்தின் - மலர்ந்து
விளங்குகின்ற சந்தனமரத்தின்; துளைத்துயில் உவந்து - பொந்துகளில்
தங்குதலை விரும்பி; துயில்வுற்ற - (அங்குச் சென்று) உறங்கின.

     குளிரைப்போக்குவதற்கு இட்ட அகிற்புகை விளக்கின் ஒளியையும்
விழுங்குமாறு இருந்ததென அகிற்புகையின் மிகுதி கூறினார்.  மழைக்காலத்தில்
மகளிரும் மைந்தரும், குளிர்தீருமாறு ஊட்டப்பெற்ற அகிற்புகை கமழும்
கட்டிலில் ஏறினர் என்க.  மழைக்காலத்தில் தாமரை மலர்கள் இதழ் குவிந்தும்,
நீரில் ஆழ்ந்தும் அழிந்தும் போவதால், அம்மலரில் தங்குதலைவிடுத்து
வண்டுகள் கரையிலுள்ள உலர்ந்த சந்தனமரப் பொந்துகளில் விருப்பத்தோடு
சென்று இனிது உறங்கலாயின.

     'புதிய மழைத் தாரைகள் அழிக்கப்பட்ட தாதுக்களையுடைய தாமரை
மலர்களை விட்டு, வண்டுகள், தாதுக்களோடு கூடிய புதிய கடம்ப மலர்களை
மகிழ்ச்சியோடு சேர்கின்றன' என்று வால்மீகி ராமாயணத்தில் கூறியிருப்பது
ஈண்டுக் காணத்தக்கது.  சிறந்த தாமரை மலரில் துயின்று பழகிய வண்டு,
மரங்களிடையேயும் உயர்ந்த சந்தன மரத்தையே நாடிச் சென்ற நயம் காண்க.
உயர்திணை மக்கள் வெம்மையை விரும்பியது போல அஃறிணை உயிரான
வண்டுகளும் வெம்மையைத் தேடிச் சென்றன என்பதால் குளிரின் மிகுதி
கூறப்பட்டது. இப்பாடலில் மருத நிலத்துத் தாமரையில் துயிலும் வண்டு
குறிஞ்சி நிலச் சந்தன மரத்திற்குச் சென்றது எனத் திணைமயக்கம்
கூறப்பட்டது.                                                  80