4230. | சரம் பயில் நெடுந் துளி நிரந்த புயல் சார, உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா, வரம்பு அகல் நறும் பிரசம் வைகல் பல வைகும் முரம்பினில் நிரம்பல; முழைஞ்சிடை நுழைந்த. |
நிமிர்ந்த புயல் - (வானத்தில்) உயர்ந்து விளங்கிய மேகங்களிலிருந்து; சரம்பயில் நெடுந்துளி - அம்புகளை ஒத்த பெரிய மழைத் தாரைகள்; சார - தம்மேல் விழுவதால்; உரம் பெயர்வு இல் வன்கரி - மன வலிமை நீங்குதல் இல்லாத உடல் வலிமை மிக்க யானையும்; ஒடுங்கா - (மழையினால்) ஒடுங்கி; வரம்பு அகல் நறும் பிரசம் - அளவற்ற பெரிய தேன்கூடுகள்; பலவைகல் வைகும் - பல நாட்களாக அமையப்பெற்ற; முரம்பினில் - மேட்டு நிலங்களில்; நிரம்பல - (கூட்டமாகத்) தங்க மாட்டாதனவாய்; கரந்து உற - (மழை நீர் தம்மேல்படாதபடி) மறைந்து தங்க; முழைஞ்சிடை நுழைந்த - மலைக்குகைகளில் நுழைந்தன. மழைத் தாரைகள் அம்புகளை ஒத்து விளங்கின என்பதைச் 'சரம்பயில் நெடுந்துளி' என்றறர். 'தண்துளி பளிக்குக்கோல் போல் தாரையாய்ச் சொரிந்து' (சீவக. 508) என்ற அடியைக் காண்க. யானையின் மனவலிமையும் உடல் வலிமையும் 'உரம் பெயர்வு இல் வன் கரி' எனச் சுட்டப்பட்டது. அத்தகைய யானைகளும் தாம் வாழ்ந்த இடங்களை விட்டு ஒடுங்கிக் குகைகளில் நுழைந்தன என்பதால் மழையின் மிகுதியும் குளிரும் உணர்த்தப்பட்டன. பிரசம் - தேன்; இங்குத் தன்கூட்டைக் குறித்தது. உயரத்தில் வந்து எடுப்பவர் இன்மையால் தேன்கூடுகள் பல நாட்களாகக் கற்பாறையாகிய மேட்டு நிலங்களில் கட்டியபடியே அழியாமல் இருந்தனஎன்க. 83 |