இராமனின் விரகதாபம்

4231. இத் தகைய மாரியிடை,
      துன்னி இருள் எய்த,
மைத் தகு மணிக் குறு
      நகைச் சனகன் மான்மேல்
உய்த்த உணர்வத்தினன்,
      நெருப்பிடை உயிர்ப்பான்,
வித்தகன், இலக்குவனை
      முன்னினன், விளம்பும்:

     இத்தகைய மாரியிடை - இத்தன்மை வாய்ந்த மழைக்காலத்தில்; இருள்
துன்னி எய்த -
இருந்து செறிந்து வந்தடைய; வித்தகன் - அறிவில் சிறந்த
இராமன்; மைத்தக மணி - மணி என்று சொல்லத்தக்க கண்ணின்
கருமணியையும்; குறுநகை - புன்சிரிப்பையும் உடைய; சனகன் மான்மேல் -
சனகன் பெற்ற மகளான மான் போன்ற பார்வையுடைய சீதை மீது; உய்த்த
உணர்வத்தினன் -
செலுத்திய உணர்வுகளை உடையவனாய்; நெருப்பிடை
உயிர்ப்பான் -
நெருப்புப் போன்று இடையிடையே பெருமூச்ச விடுபவனாய்;
இலக்குவனை முன்னினன் -
இலக்குவனை நோக்கி; விளம்பும் - (சில
சொற்களைச்) சொல்லலானான்.

     சீதையின் கரிய கண்களின் பார்வையிலும், புன்சிரிப்பின் அழகிலும்
இராமனுக்கு உள்ள ஈடுபாடு விளங்க 'மைத்தகு மணிக்குறுநகைச் சனகன் மான்'
என்றார்.  இராமனது பிரிவுத்துன்பத்தை 'உய்த்த உணர்வத்தினன், நெருப்பிடை
உயிர்ப்பான்' என்னும் தொடர்கள் உணர்த்தும்.

     வித்தகன் - அறிவில் சிறந்தவன்; ஈண்டு இராமனைக் குறித்தது.
''பத்துடை அடியவர்க்கு எளியவேன், பிறர்க்கரிய வித்தகன்'' (திருவாய்மொழி
- 1 - 3 - 1), 'வித்தகனே இராமாவோ' (பெரியாழ் - 3 - 10 - 6) என்ற
அடிகள் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன; இராமபிரானையே பெரியாழ்வார்
'வித்தகன்' என்று குறித்தார்.  அக் குறிப்பு கவிச்சக்கரவர்த்தியின் ஆட்சிக்கு
வலிமையும் வனப்பும் சேர்க்கின்றது.

     சீதையைப் பிரிந்து இராமன் மழைக்காலத்தில் வருந்தியதையும்,
இலக்குவன் அவ்வப்போது தேற்றுவதையும் முதல் நூலிலும் காணலாம்.
உணர்வினன் என்பது அத்துச் சாரியை பெற்று 'உணர்வத்தினன்' என
ஆயிற்று.                                               84