கலிவிருத்தம்

4232. 'மழைக் கரு மின்
      எயிற்று அரக்கன் வஞ்சனை
இழைப்ப, அருங்கொங்கையும்
      எதிர்வுற்று, இன்னலின்
உழைத்தனள், உலைந்து உயிர்
      உலக்கும்; ஒன்றினும்
பிழைப்ப அரிது, எனக்கும்;
      இது என்ன பெற்றியோ?

     மழைக்கரு மின் எயிற்று - மேகம் போன்ற கருநிறத்தையும்
மின்னலைப் போன்ற பற்களையும் உடைய; அரக்கன் - அரக்கனாகிய
இராவணன்; வஞ்சனை இழைப்ப - வஞ்சனை செய்ய; அருங் கொங்கையும்
-
அரிய முலைகளை உடைய சீதையும்; எதிர்வுற்று - (அவ் வஞ்சனைக்கு)
இலக்காகி; இன்னலின் உழைத்தனள் - துன்பத்தால் வருந்தியவளாய்;
உலைந்து உயிர் உவக்கும்
-வாடி உயிர் அழிவாள்; எனக்கும் -
(அவளைப் பிரிந்திருக்கும்) எனக்கும்; ஒன்றினும் பிழைப்ப அரிது - எந்த
ஒரு வகையிலும் (துன்பத்தினின்று) பிழைத்தல் அரிதாக இருக்கின்றது; இது
என்ன பெற்றியோ -
இது என்ன தன்மையோ?

     மேகம் போலக் கரிய நிறமும், மின்னல் போன்ற பற்களையும் உடைய
இராவணனது வஞ்சனையில் அகப்பட்டுச் சீதை வருந்தி உயிர் அழிதல்
போலத் தானும் கரிய நிறத்தையும் மின்னலையும் உடைய மேகத்தின்
கொடுமைக்கு இலக்காகி வருந்துவதாக இராமன் குறிப்பால் உணர்த்தியது நயம்
மிக்கதாகும்.  தம்மை வருத்திய பொருள்களில் உள்ள ஒற்றுமையைக் காட்டி
'இது என்ன இயல்போ?' என இரங்கிக் கூறினான்.  'உயிர் உலக்கும்'
'ஒன்றினும் பிழைப்பு அரிது' என்னும் தொடர்கள் பிரிவால் ஏற்படும்
பெருந்துன்பத்தை விளக்கி நிற்பன.                               85