4235. | 'வானகம் மின்னினும், மழை முழங்கினும், யான் அகம் மெலிகுவென், எயிற்று அரா என; கானகம் புகுந்து யான் முடித்து காரியம், மேல் நகும், கீழ் நகும்; இனி என் வேண்டுமோ? |
வானகம் மின்னினும் - மேகம் மின்னினாலும் (அதனைக் கண்டும்); மழை முழங்கினும் - மேகம் இடி முழக்கம் செய்தாலும் (அதைக் கேட்டும்); எயிற்று அரா என - நச்சுப் பற்களை உடைய நாகம் (வருந்துவது) போல; யான் அகம் மெலிகுவேன் - நான் மனம் வருந்துபவனாவேன்; யான் கானகம் புகுந்து - நான் காட்டில் வந்து; முடித்த காரியம் - சாதித்த செயலைக் குறித்து; மேல்நகும் கீழ்நகும் - மேல் உலகத்தவர் நகைப்பர், கீழ் உலகத்தவரும் நகைப்பர்; இனி என் வேண்டுமோ - இனியும் வேறு என்ன இழிவு வரவேண்டும்? (இதுவே போதும் என்றபடி). மின்னலுக்கும் இடிக்கும் அஞ்சி வருந்துவது பாம்பின் இயல்பாகும். பிரிந்திருப்போர் மழைக்காலத்தில் வருந்துதல் இயல்பாதலின் 'யான் அகம் மெலிகுவன்' மனைவியைப் பகைவன் கவர, அவளை மீட்கவும் செய்யாது வருந்தி நிற்கும் நிலையே தான் காட்டில் வந்து சாதித்த காரியம் என்று எண்ணி மனம் நொந்து, தன் நிலை கண்டு மேல், கீழ் உலகங்கள் எள்ளி நகையாடுமே என இராமன் வருந்தினான். ''யான் வனம் போந்தது, என்னுடைப் புண்ணியத்தால்'' (2648) எனத் தண்டகவனத்து முனிவர்களிடம் கூறிய இராமன் இங்கு 'யான் கானகம் புகுந்து முடித்த காரியம் மேல் நகும், கீழ் நகும்' எனக் கூறியது குறிக்கத்தக்கது. மேல் உலகம், கீழ் உலகம் எனக் கூறியதால் உபலக்கணத்தால் நடு உலகமாகிய இவ்வுலகமும் பெறப்படும். மேல், கீழ் என்பன இடவாகு பெயர்களாய் மேல் உலகினரையும், கீழ் உலகினரையும் குறிக்கும். நகுதல் - இகழ்ச்சிச் சிரிப்பு. 'வான் நகும்; மண்ணும் எல்லாம் நகும்' (7282) என்றதும் காண்க. இனி, இதனினும் இழிநிலை இல்லை யென்பானான், 'இனி என் வேண்டுமோ?' என்றான். 88 |