4236.'மறந்திருந்து உய்கிலேன்;
     மாரி ஈதுஎனின்,
இறந்து விண் சேர்வது
      சரதம்; இப் பழி,
பிறந்து பின் தீர்வலோ?
      பின்னர், அன்னது
துறந்து சென்று உறுவலோ?
     துயரின் வைகுவேன்!

     துயரின் வைகுவேன் - துயரத்தில் தங்கியிருப்பேனாகிய நான்; மறந்து
இருந்து உய்கிலேன் -
சீதையை மறந்து இருந்து உயிர் பிழைக்க வல்லேன்
அல்லன்; மாரி ஈது எனின் - கூதிர்க்கால மழை என்னை இவ்வாறு
வருத்துமாயின்; இறந்து விண் சேர்வது - நான் இறந்த விண்ணுலகத்தை
அடைவது; சரதம் - உறுதியாகும்; இப்பழி - (சீதையை இராவணன் கவர்ந்து
சென்றதால் எனக்கேற்பட்டுள்ள) இந்தப் பழிச் சொல்லை; பிறந்து பின்
தீர்வலோ -
மற்றொரு பிறவியெடுத்து (அவனோடு போர் செய்து) தீர்த்துக்
கொள்வேனோ?பின்னர் - (அல்லது) அப்பிறவியில்; துறந்து சென்று -
இல்லறத்தைத் துறந்து சென்று; அன்னது உறுவலோ - அப்பழிதீரும்
வகையை அடையப் பெறுவேனோ?

     இராமனுக்குச் சீதை மேலுள்ள அன்பை, 'மறந்திருந்து உய்கிலேன்' என்ற
தொடர் உணர்த்தும்.  பிரிவுத்துன்பத்தை மிகுவிக்கும் வகையில் மழை
பெய்யுமாயின் தான் இறப்பது உறுதி எனவும் உரைத்தான்.  'மறந்திருந்து
உய்கிலேன்' என்ற தொடர் இராமன் இப்பிறவியில் துறக்கமாட்டாமையை
உணர்த்தும்.  இப்பிறவியில் இப்பழி தீரப்பெறுதல் இயலாதோ எனக்
கலங்கினான்.  அடுத்த பிறவியிலும், முன்னைப் பிறவியில் நிகழ்ந்ததை
நினைவில் கொண்டு இராவணனை வென்று பழிநீங்கல் இயலுமா என்ற
ஐயத்தால் 'பிறந்து பின் தீர்வலோ? என்றான்.  அல்லது துறவுமேற்கொண்டால்,
முந்திய பிறவியின் தொடர்புகள் நீங்குமாதலின், பழியும் பகையும் நீங்கிவிடும்
என்பதால் 'துறந்து சென்று அன்னது உறுவலோ?' என்றான்.  இப்பழியைத்
தீர்ப்பது எங்ஙனம் என்றே கலங்கினான்இராமன்.                     89