4238.'செப்பு உருக்கு அனைய
     இம் மாரிச் சீகரம்
வெப்புறப் புரம் சுட,
      வெந்து வீவதோ -
அப்பு உருக் கொண்ட வாள்
      நெடுங் கண் ஆயிழை
துப்பு உருக் குமுத வாய்
      அமுதம் துய்த்த யான்?

     அப்பு உருக் கொண்ட - அம்பின் கூரிய வடிவத்தைக் கொண்ட; வாள்
நெடுங்கண் -
ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய; ஆயிழை -
ஆராய்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்த சீதையின்; துப்பு உருக்
குமுதவாய் -
பவளம் ஒத்த நிறமுடையதும், ஆம்பல் மலர் போன்றதுமான
வாயிதழின்; அமுதம் துய்த்த யான் - அமுதத்தைப் பருகி இன்புற்ற நான்;
இம் மாரிச் சீகரம் -
இந்த மழைத் துளிகள்; செப்பு உருக்கு அனைய -
செம்பை நெருப்பிலிட்டு உருக்கி, அதனை ஊற்றினாற்போன்ற; வெப்பு உற -
வெம்மை மிகுமாறு; புரம்சுட - என் உடம்பை எரிக்க; வெந்து வீவதோ -
வெந்து அழிவது தகுமோ?

     சீதையுடன் இருந்த காலத்தில் பெருமகிழ்வு எய்தியவன், பிரிவுற்ற
காலத்தில் மழைத்துளிகள் தன்னை வருதத அழிய வேண்டியதுதான என
வருந்திக் கூறினான்.  அமுதம் உண்டவர் இறத்தல் இல்லையாதலின் சீதையின்
குமுதவாய் அமுதம் துய்த்த தான் வீவது பொருந்துமோ என இரங்கினான்.

     செம்பு, அம்பு என்பன வலித்தல் விகாரங்கள். கண்களின் நீட்சிக்கும்
கூர்மைக்கும் அம்பு உவமை ஆயிழை; அன்மொழித்தொகை; துப்பு, வாயின்
நிறத்திற்கும் குமுதம் வடிவிற்கும் உவமைகளாகும்.  'அப்புருக் கொண்ட
வாள்நெடுங் கண், என்பதில் சீதையின் இயற்கை அழகும், ஆயிழை என்பதில்
அணிகலன்களால் பெற்ற செயற்கை அழகும் உணர்த்தப்பட்டன.  தண்மையை
அளிக்கும் மழைத்துளி பிரிந்தார்க்கு வெப்பம் உண்டாக்குதல் எண்ணிப்
பார்த்தற்குரியது.                                                 91