இலக்குவன் மேலும் கூறிய தேறுதல் மொழிகள் 4243. | இளவலும் உரைசெய்வான், 'எண்ணும் நாள் இனும் உள அல; கூதிரும், இறுதி உற்றதால்; களவு செய்தவன உறை காணும் காலம் வந்து அளவியது; அயர்வது என்? - ஆணை ஆழியாய்! |
இளவலும் உரை செய்வான் - (இராமன் கூறியவற்றைக் கேட்ட) தம்பியான இலக்குவன் பின்வருமாறு கூறலானான். ஆணை ஆழியாய் - ஆணைச் சக்கரத்தை உடையவனே!எண்ணும் நாள் இனும் உள அல - (சுக்கிரீவனுக்குத் தவணையாகக்) குறிப்பிட்ட நாட்கள் இன்னும் உள்ளன அல்ல. (முடிந்து விட்டன); கூதிரும் இறுதி உற்றது - கூதிர்ப்பரு வமும் முடிவடைந்தது. களவு செய்தவன் - (சீதையை வஞ்சனையால்) கவர்ந்து சென்ற இராவணனது; உறை காணும் - இருப்பிடத்தைத் தேடிக் காண்பதற்கேற்ற; காலம் வந்து அளவியது - காலம் வந்து சேர்ந்தது. அயர்வது என் - (அங்ஙனமிருக்க) நீ வருந்துவது ஏன்? எண்ணும் நாள் என்றது முன் சீதையைத் தேடுதற்கு ஏற்றதன்று என்று கருதிய மழை நாள்களைக் குறிக்கும். அவை கார்காலமாகிய ஆவணி, புரட்டாசியும், கூதிர்காலமாகிய ஐப்பசி, கார்த்திகையுமாகிய நான்கு மாதங்கள். இராமன் சுக்கிரீவனிடம் 'என்கண் மருவுழி மாரிக்காலம் பின்னுறு முறையின், உன்தன் பெருங்கடல் சேனையோடும் துன்னுதி, போதி' (4131) எனக் கூறியது காண்க. 'உள அல' என்றதும் கூதிரும் இறுதி உற்றது என்றதும் மழைக்காலம் முடிவுறுந தறு வாயில் இருப்பதையே உணர்த்தின. இன்னும் சில நாள்கள் உள்ளன என்பதைக் 'காலம் வந்து அளவியது' என்ற தொடரும் உணர்த்துகிறது. காலம் என்பது மார்கழித் திங்களைக் குறிக்கும். சீதையை வஞ்சித்துக் கவர்ந்தவனாதலின் இராவணனைக் களவு செய்தவன்' என்றான். இராவணனைக் கண்டு பிடித்துச் செயலாற்றும் காலம் வந்துவிட்டதால் இராமன் அயர்வுகொள்ள வேண்டிய நிலை இல்லை என இளவல் ஆறுதல் உரைத்தனன். இராமன் சக்கரவர்த்தித் திருமகனாதலால் 'ஆணை ஆழியாய்' என விளித்தான். எங்கும் செல்லும் இயல்பு பற்றி ஆணையைச் சக்கரம் என்று கூறுதல் மரபாகும். 'உறை' என்பதற்கு வாழ்நாள் என்ற பொருள் இருத்தலால் 'சீதையைக் கவர்ந்த இராவணனுடைய வாழ்நாள் முடிவு காணும் காலம் வந்து நெருங்கியது' என்று பொருள் காணலும் அமையும். 96 |