4245.'மனத்தினின் உலகு எலாம்
      வகுத்து, வாய்ப் பெயும்
நினைப்பினன் ஆயினும்,
      நேமியோன் நெடும்
எனைப் பல படைக்கலம்
      ஏந்தி, யாரையும்,
வினைப் பெருஞ் சூழ்ச்சியின்
      பொருது வெல்லுமால்.

     நேமியோன் - (மற்றும்) அத்திருமால்; மனத்தினின் - திருவுள் ளத்தில்
நினைத்த மாத்திரத்தில்; உலகு எலாம் வகுத்து - உலகங்களை எல்லாம்
படைத்து;  வாய்ப் பெயும் - வாயில் போட்டு உண்ணத்தக்க; நினைப்பினன்
ஆயினும் -
சங்கற்ப வலிமை உடையவனாயினும்; எனைப்பல நெடும்
படைக்கலம் ஏந்தி -
(அங்ஙனம் செய்யாமல்) வேறு பல பெரிய
ஆயுதங்களைக் கையிற் கொண்டு; யாரையும் - (கொடிய வர்கள்)
அனைவரையும்; வினைப் பெரும் சூழ்ச்சியின் - போர்த் தொழிலுக்குரிய
சூழ்ச்சிகளோடு; பொருது வெல்லும் - போர் செய்தே வெற்றி கொள்வான்.

     தான் பரமபதத்தில் அல்லது பாற்கடலில் இருந்தவாறே தன் மனத்தால்
நினைத்த அளவில் சங்கற்ப மாத்திரையில் - அனைவரையும் அழிக்க
வல்லவனாயினும், திருமால் அங்ஙனம் செய்யாது பல படைக்கருவிகளைக்
கொண்டு பகைவர்கள் உள்ள இடம் சென்று இடத்திற்கேற்பச் சூழ்ச்சித்
திறத்தோடு போர் செய்தல் அவதார தத்துவம்.  சூழ்ச்சி - தந்திரம்;
கொடியவர்கள் செய்யும் மாயைகளுக்கு ஏற்ப மாயை செய்து போர்புரிதல்.

     உலகு - இடத்தையும் உயிர்களையும் உணர்த்திற்று.  வகுத்தல் -
படைத்தல்; வாய்ப்பெய்தல் - அழித்தல். 'உண்டும் உமிழ்ந்தும் கடந்தும்
இடந்தும் கிடந்தும் நின்றும்' (திருவாய் - 4 - 5 - 10) என்றது காண்க.
பெயும் - பெய்யும்; தொகுத்தல் விகாரம்.  நேமியான் - சக்கரபாணி.
பிறிதுமொழிதலணி.                                             98