4248. | 'அறத் துறை திறம்பினர், அரக்கர்; ''ஆற்றலர் மறத் துறை நமக்கு'' என வலிக்கும் வன்மையோர் - திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டுஎனின், புறத்து, இனி யார் திறம் புகழும் வாகையும்? |
அறத்துறை திறம்பினர் அரக்கர் - அறவழியினின்று மாறுபட்ட வர்களாகிய அரக்கர்கள்; ஆற்றலர் - (உடல், வரம், சேனை இவற்றில்) வலிமை உடையவர்களாய்; மறத்துறை நமக்கு என - 'பாவ வழியே நம்மனோர்க்குச் சிறந்தது' என்று; வலிக்கும் வன்மையோர் - உறுதியாக நினைக்கும் வலிமை உடையவர்கள். திறத்து உறை நல்நெறி - (அவர்கள் அவ்வாறு) நிலைத்த பேறுடைய நல்ல நெறியிலிருந்து; திறம் பல் உண்டு எனின் - தவறுதல் உள்ளது என்றால்; புறத்து இனி - அப்பால்; புகழும் வாகையும் - புகழும் வெற்றியும்; யார் திறம் - யாரிடத்தில் சேரும்? (அறநெறி பிழையாத உன்னையே சேரும்). அறம் வெல்லும் பாவம் தோற்கும்' என்பது உறுதியாதலின் ஆற்றல் உடையராயினும் அரக்கர்கள் அறநெறி தவறியவர்களாதலின் அவர்கள் பழியையும் தோல்வியையும் பெற்று அழிய, அறவழியில் நடக்கும் இராமனுக்கே புகழும் வெற்றியும் வந்து சேரும் எனக் காரணம் காட்டித் தேறுதல் கூறினான். 'புறத்தினி யார் திறம் புகழும் வாகையும்' என வெற்றியின் உறுதியை வற்புறுத்திக் காட்டினான் இளவல். ''பாவம் தோற்றது, தருமமே வென்றது இப்படையால்'' (4444), 'வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மையால்?' (5144) என்பன ஒப்புநோக் கத்தக்கன. ''கடஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும், நெடுங் கொடிய நிமிர் தேரும் நெஞ்சுடைய புகன்மறவரும்' என நான்குடன் மாண்டதாயினும் மாண்ட, அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறம் - 55) என்றதும்காண்க. 101 |