கூதிர்ப்பருவம் நலிந்து தீர்தல்

4250. உறுதி அஃதே என
      உணர்ந்த ஊழியான்,
'இறுதி உண்டேகொல் இம்
      மாரிக்கு?' என்பது ஓர்
தெறு துயர் உழந்தனன்
      தேய, தேய்வு சென்று
அறுதியை அடைந்தது, அப்
      பருவம், ஆண்டு போய்.

     அஃது உறுதியே என - (இவ்வாறு இலக்குவன் கூறிய உரை களைக்
கேட்டு) அவன் கூறியன யாவும் உறுதி பயப்பனவே என; உணர்ந்த
ஊழியான் -
உணர்ந்த ஊழிக்காலத்தையும் வெல்ல வல்ல இராமன்;
இம்மாரிக்க இறுதி உண்டே கொல் -
'இம்மழைக் காலத்திற்கு ஒரு முடிவும்
உள்ளதோ?' என்பது ஓர் தெறுதுயர் - என்று எண்ணியதாலாகிய ஒப்பற்ற
கொடிய துன்பத்தால்; உழந்தனன் தேய - வருந்தி, மெலிந்து நிற்க;
அப்பருவம் -
அந்தக் கூதிர்காலம்; ஆண்டு போய் - தன் ஆட்சியைச்
செய்துவிட்டு; தேய்வு சென்று - சிறிது சிறிதாகத் தன் வலிமை தேய்ந்து;
அறுதியை அடைந்தது -
முடிவடைந்தது.

     ஊழிக்காலத்தும் அழியாத கடவுளான இராமபிரான் காலத்திற்க வசப்
பட்டு வருந்தியது, தான் கொண்ட மனித உருவிற்கேற்ப பாவனையே என்பது
விளங்க 'ஊழியான்' என்றார்.  தனக்கு இளையவன் தானே எனக் கருதாது
இலக்குவன் கருத்தை ஏற்றுக்கொண்டதை 'உறுதி அஃதே என உணர்ந்த
ஊழியான்' என்றார்.  இராமன் தேய அப்பருவமும் உழந்தவன்மீது கொண்ட
பரிவால் தேய்வு சென்று அறுதி அடைந்தது என்ற நயம் காண்க.
கூதிர்ப்பருவம் தேய்வு செல்லுதலாவது மழை நாளாக நாளாகக் குறைந்து
வருதல்; அறுதி அடைதலாவது.  மழை இல்லாமல் போவதாகும் முன் பாடலில்
'பைந்தொடிக் கிடர்களை பருவம் வந்து அடுத்துளது' எனக் கூறியதற்கேற்ப
சிலநாட்களில் மழைக்காலம் முடிவுற்றது என்று இங்குக்கூறினார்.         103