4251. மள்கல் இல் பெருங்
      கொடை மருவி, மண்உளோர்
உள்கிய பொருள் எலாம்
      உதவி, அற்ற போது
எள்கல் இல் இரவலர்க்கு
      ஈவது இன்மையால்,
வெள்கிய மாந்தரின்,
      வெளுத்த - மேகமே.

     மள்கல் இல் பெருங்கொடை - குறைதல் இல்லாத பெரிய கொடைத்
தொழிலை; மருவி - மேற்கொண்டு; மண் உளோர் உள்கிய - உலகத்தில்
உள்ளவர் பெறக்கருதிய; பொருள் எலாம் உதவி - பொருள்கள்
எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு; அற்றபோது - தம்மிடத்துப் பொருள்
இல்லாவிடத்து; எள்கல் இல் இரவலர்க்கு - இகழப் படாத இரப்போர்க்கு;
ஈவது இன்மையால் -
கொடுக்கவேண்டிய பொருள்களைக் கொடுக்க
முடியாமையால்; வெள்கிய மாந்தரின் - வருந்துகின்ற (வெளுத்த)
மனிதர்களைப் போல; மேகம் வெளுத்த - (தம்மிடமுள்ள நீரை எல்லாம்
பெய்துவிட்டமையால்) மேகங்கள் வெளுத்துத் தோன்றின.

     மக்களுக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் கொடுக்கும்
கொடையாதலின் 'மள்கலில் பெருங்கொடை' என்றார்.  கொடுத்தல் என்பது
பிறவிக் குணமாக அமைவதால் 'மருவி' எனக் குறிப்பிட்டார்.  பிறர்
துன்பத்தைக் குறிப்பால் அறிந்து அவர் கேட்பதற்கு முன்பேயே கொடுத்தல்
சிறப்பாதலின 'மண் உளோர் உள்கிய பொருள் எலாம் உதவி' என்றார்.
மண்ணுளோர் எனப் பொதுப்படக் கூறினும் தகுதியுடையார்க்கு உதவுதலே
சிறப்புடைத்து.  உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின்
வரைத்து'' (குறள் - 105), என்றதும் 'பாத்திரமறிந்து பிச்சையிடு' என்ற
பழமொழியும் காண்க.  இரப்பவரை எள்ளுதல் கூடாது என்பதால் 'எள்கலில்
இரவலர்' எனப்பட்டனர்.  கொடுத்துப் பழிகியவர் தம்மிடம் வந்து
கேட்பார்க்குக் கொடுக்கத் தம்மிடம் பொருள் இல்லையெனின் பெரிதும்
நாணுவர் என்பதை 'ஈவது இன்மையால் வெள்கிய மாந்தர்' எனக் குறித்தார்.
''சாதலின் இன்னாதது இல்லை.  இனிதுஅதூஉம் ஈதல் இயையாக் கடை''
(குறள் - 230); இன்மையுரைத்தார்க்கது நிறைக்கல் ஆற்றாக்கால் தன்மெய்
துறப்பான் - (கலி - 43), ''இரப்பார்க் கொன்றீயாமை அச்சம்' (நாலடி -145),
'ஈதல் இரந்தார்க் கொன்று ஆற்றாது வாழ்தலின், சாதலும் கூடுமாம்' (கலி. 61);
''ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று'' (புறம் - 204) என்பவற்றால்
கொடுக்கும் இயல்புடையார்; கொடை புரியாமையை இழிவெனக் கருதி, அஞ்சிச்
சாதலையும் இனிதென ஏற்பர் என்பதை அறியலாம்.

     மழை பொழிந்து வெளுத்த மேகத்திற்குக் கொடுத்து வறிதாய வள்ளல்கள்
உவமையாயினர்.  'உள்ளி உள்ளவெல்லாம் உவந்து ஈயும் அவ்வள்ளியோரின்
வழங்கின மேகமே' (15) என முன்னரும் இவ்வுவமை கூறியிருத்தல் காண்க.
மாந்தர் தம்மிடம் உள்ள பொருள் அனைத்தும் கொடுத்தே வறியராயினது
போல மேகமும் தன்னிடமுள்ள நீரனைத்தையும் பொழிந்தேவெளுத்தது.  104