4253.மூள் அமர் தொலைவுற,
      முரசு அவிந்தபோல்,
கோள் அமை கண
      முகில் குமறல் ஓவின;
நீள் அடு கணை
      எனத் துளியும் நீங்கின;
வாள் உறை உற்றென
      மறைந்த, மின் எலாம்.

     மூள் அமர் தொலைவுற - (பகைவர் மேல்) மாறுபாட்டால் மூண்டபோர்
முடிவுற்ற அளவில்; முரசு அவிந்த போல - போர் முரசுகள் ஒலி அடங்கின
போல; கோள் அமை கணமுகில் - கடல்நீரைக் கொள்ளுதல் அமைந்த
மேகக் கூட்டங்களின்; குமுறல் ஓவின - இடி முழக்கம் ஒழிந்தன.நீள் அடு
கணை என
 - நீண்டதாய்ப் பகைவரை அழிக்கும் அம்புகள் (போர்
முடிந்ததும்) எய்யப்படாமை போல; துளியும் நீங்கின - மழைத்துளிகளும்
(வீழ்தல்) ஒழிந்தன.  வாள் உறை உற்றென - (போர் முடிந்த அளவில்)
வாட்படைகள் உறைகளுள் (செருகப்பட்டு) மறைந்தாற்போல; மின் எலாம்
மறைந்த -
மின்னல்கள் எல்லாம் மறைந்தன.

     'மூள்அமர் முற்றுற' என்பதை மூன்று வாக்கியங்களுடன் கூட்டுக.
இதனை முதல் நிலைத்தீவக அணி என்பர்.  போர் முடிந்த அளவில் முரசு
ஒலி அடங்கும், அம்பு மழை ஓயும், வாட்கள் உறையிலிடப்பெறும்.
அவைபோல மழை நீங்கிய அளவில் முகிலின் முழக்கமும், மழைத்தாரைகளும்,
மின்னல்களும் மறைந்தன.  இடிக்கு முரசம் உவமையாதலை 'வென்றி முரசின்
இரங்கி யெழில் வானம்' (கார் நாற்பது 35) என்புழிக் காணலாம்.  'மன்மதன்
மலர்க்கணை வழங்கினால் என, பொன்னெடுங் குன்றின் மேல் பொழிந்த
தாரைகள்' (4162); 'துளித்திவலை காரிடு வில்லிடைச் சரம்என, விசையின்
வீழ்ந்தன' (4163); 'அசைவுறு சிறுதுளி அப்பு மாரியின்' (4171) என்பன
மழைத்துளிகளுக்கு அம்பு உவமையாதலைக் காட்டுவன.  மின்னலுக்கு வாள்
உவமையாதலை 'மின் கூர்த்து எழு வாள் எனப் பிறழும் கோட்பினும்' (4161).
என முன்னரும் கூறியுள்ளமை காண்க.  கோள் அமை - கடல் நீரை முகந்து
கொள்ளும் தன்மை.  முதனிலை நீண்ட தொழிற் பெயர்.              106