4256. கடம் திறந்து எழு களிறு
      அனைய கார் முகில்
இடம் திறந்து ஏகலின்,
      பொலிந்தது இந்துவும் -
நடம் திறன் நவில்வுறு
      நங்கைமார் முகம்,
படம் திறந்து உருவலின்,
      பொலிவும் பான்மைபோல்.

     கடம் திறந்து எழுகளிறு அனைய -கன்னங்கள், கபாலங்கள் வழி
(மதநீர் சொரிந்து கொண்டு) செல்கின்ற ஆண்யானைகளை ஒத்திருந்த; கார்
முகில் -
கரிய மேகங்கள்; இடம் திறந்து ஏகலின் - (தாம் கவிந்து
கொண்டிருந்த) விண்ணிடத்தை (வெளியாகும்படி) விட்டுச் சென்றமையால்;
இந்துவும் -
(கார்மேகங்களால் மறைக்கப்பட்டிருந்த) சந்திரனும்; படம் திறந்து
உருவலின் -
(மறைக்கும்பொருட்டு இடப் பட்ட) திரைச்சீலையை உருவித்
திறந்துவிட்டதால்; நடம் திறன் நவில் வுறு - நடனத்தைத் திறம்படச்
செய்யும்; நங்கைமார் முகம் - நடன மங்கையரின் முகம்; பொலியும்
பான்மைபோல் -
விளங்கும் தன்னை போல; பொலிந்தது - விளங்கித்
தோன்றிற்று.

     மழை பொழிந்துவிட்டுச் செல்லும் மேகத்திற்கு மதம் சொரிந்துவிட்டுச்
செல்லும் களிறு உவமை.  கரிய பெரிய வடிவமும், விரைந்த கதியும்,
முழக்கமும், மழை பொழிதலும் பற்றி 'கடம் திறந்து எழு களிறு அனைய
கார்முகில்' என்றார்.  மேகங்களின் மறைப்பு நீங்கச் சந்திரன் விளக்கமுறத்
தோன்றியமைக்கு, அரங்கில் திரைச்சீலை விலகப் புலனாகும்.  நடன
மங்கையர் முகம் உவமையாயிற்று.  படம் -திரைச்சீலை.           109