4260. | வஞ்சனை, தீவினை, மறந்த மா தவர் நெஞ்சு எனத் தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ; 'பஞ்சு' என, சிவக்கும் மென் பாதப் பேதையர் அஞ்சனக் கண் எனப் பிறழ்ந்த, ஆடல் மீன். |
வஞ்சனை தீவினை - தீவினைக்கு இடமான வஞ்சனையை; மறந்த மாதவர் - அறவே நீக்கிய பெருந்தவ முனிவரின்; நெஞ்சு என - மனம் போல; தெளிந்த நீர் - தெளிந்த நீர்; நிரந்து தோன்றுவ - (கலக்கமின் றிப்) பரந்து காணப்படும்; ஆடல் மீன் - (அந்நீரில்) விளையாடும் மீன்கள்; பஞ்சு எனச் சிவக்கும் - செம்பஞ்சுக் குழம்பு போலச் சிவந்து நிற்கும்; மென்பாதப் பேதையர் - மென்மையான பாதங்களை உடைய மகளிரின்; அஞ்சனக் கண் என - மைதீட்டிய கண்கள் பிறழ்வது போல; பிறழ்ந்த - பிறழ்ந்தன. முனிவர்கள் தவம் அன்றிப் பிறவற்றை அறியாராதலின் 'தீவினை மறந்த மாதவர்' என்றார். மனம் கலங்குதற்குக் காரணமான தீவினை நீங்கியதாலும், மனம் தெளிவு பெறுதற்குக் காரணமான கல்வி, கேள்விகளால் தெளிந்த ஞானம் பெற்றமையாலும் அவர்கள் நெஞ்சு தெளிவுடைய நெஞ்சமாயிற்று. மழை நீங்கிய பின்னர் நீர்நிலைகள் தெளிவடைந்த நிலைக்கு மாதவர் மனம் உவமை கூறப்பட்டது. 'தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை' என்று எண்ணும் மங்கைமார் சிந்தை போலத் தூயது' (408) என்றமை ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. தெளிந்த நீரில் மீன்கள் பிறழ்தலுக்கு மகளிர் கண்கள் பிறழ்தல் உவமை. எதிர்நிலை உவமை அணி. 113 |