4261. ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன,
தாள்தொறு மலர்ந்தன, முதிர்ந்த தாமரை;
கூடினர் துவர் இதழ்க் கோலம் கொண்டன,
சேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை.

     தாள்தொறு மலர்ந்தன - நாளங்கள் தோறும் மலர்ந்தனவாய்; முதிர்ந்த
தாமரை -
முதிர்ச்சி பெற்ற தாமரை மலர்கள்; ஊடிய மடந்தையர் -
(தலைவரோடு) ஊடல்கொண்ட மகளிரின்; வதனம் ஒத்தன - முகத்தைப்
போன்ற. (ஒரு புறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டன என்றபடி); சேடு உறு
நறுமுகை -
அழகு பொருந்திய நறுமணம் மிக்க அரும்புகள்; விரிந்த
செங்கிடை -
மலரப்பெற்ற செங்கிடை மலர்கள்; கூடினர் துவர் இதழ் -
தலைவரொடு சேர்ந்து மகிழும் மகளிரின் சிவந்த இதழ்கள்போல; கோலம்
கொண்டன -
அழகுடன் விளங்கின.

     தலைவர்மீது ஊடல் கொள்ளும் மகளிர் சினக்குறியாக முகத்தைத்
திருப்பிக் கொள்ளல் இயல்பு.  அத்தகு மகளிர் முகம், சில நாட்களுக்கு
முன்னர் மலர்ந்து பின்பு முதிர்ந்து ஒரு புறம் சாய்ந்து விடும் தாமரை மலர்க்கு
உவமை ஆயிற்று.  பனிக்காலத்தில் தாமரை பொலிவிழத்தலைத் ''தாமரை
முகங்கள் வாட்டும் தண்பனிக் காலந்தன்னில்'' (நைடதம். அன்னத்தைக்
கண்ணுற்ற -9) என்றதாலும் அறியலாம்.  செங்கிடை - நீரில் தோன்றும் சிவப்பு
நெட்டி.  தலைவரொடு கூடிய மகளிர் வாயிதழ் சிவந்திருப்பது போலச்
செங்கிடை மலர்கள் செந்நிறமுடையன வாய் மலர்ந்திருந்தன.  இருவகை
மலர்க்கும் உவமையாக, ஊடிய மகளிர் வதனத்தையும், கூடிய மகளிர் துவர்
இதழையும் கூறிய நயம் காண்க.  செங்கிடை - ஆகுபெயராய் மலரை
உணர்த்திற்று.                                                  114