4262. கல்வியின் திகழ்
      கணக்காயர் கம்பலைப்
பல் விதச் சிறார் எனப்
      பகர்வ பல் அரி,
செல் இடத்து அல்லது
      ஒன்று உரைத்தல்செய்கலா
நல் அறிவாளரின்,
      அவிந்த, நா எலாம்.

     கல்வியின் திகழ் - கல்வியால் விளக்கம் பெற்றுள்ள; கணக்காயர் -
பள்ளி ஆசிரியர்; கம்பலை - (பயில்விக்க) ஆரவாரத்தோடு; பல் விதச் சிறார்
என -
(கல்விகற்கின்ற) பலவகைப்பட்ட சிறுவர்கள் போல; பகர்வ -
(மழைக்காலத்தில்) கத்திக் கொண்டிருந்த; பல் அரி எலாம் - பல்வகைப்பட்ட
தவளைகள் எல்லாம்; செல் இடத்து அல்லது - (தம்முடைய சொற்கள்)
பலிக்கும் இடத்திலன்றி; ஒன்று உரைத்தல் செய்கலா - (பிற இடங்களில்) ஒரு
சொல்லையும் சொல்லுதல் செய்யாத; நல் அறிவாளரின் - நல்ல
அறிவுடையவர்கள் போல; நா அவிந்த - நா அடங்கின.

     மழைக் காலத்தில் தவளைகள் மிகுதியாகக் கத்துதலும் மழை நீங்கிய
காலத்தில் குரல் ஒடுங்கலும் இயல்பாகும்.  மழைக் காலத்தில் தவளைகள்
எழுப்பும் பேரொலிக்குப் பள்ளியில் ஆசிரியர் பாடம் சொல்ல உடன்
சொல்லும் சிறுவர்களின் பேரொலியும், அத்தவளைகள் மழை நீங்கிய காலத்தில்
ஓரோர் சமயம் ஒலி எழுப்பி்ப் பிற சமயங்களில் அடங்கியிருந்த நிலைக்கு,
செல்லும் இடங்களில் பேசிப் பிற சமயங்களில் பேசாதிருக்கும் அறிஞர்
நிலையும் உவமையாயின.  ஆரவாரத்திற்குப் பள்ளிச் சிறுவரையும்,
நாவடக்கத்திற்கு அறிஞர்களையும் உவமை கூறிய நயம் காண்க. 
கணக்காயர்- எண்ணும் எழுத்தும் ஆகிய நெடுங்கணக்கை ஆராய்பவர்.

     இச்செய்யுட் கருத்து வான்மீகத்தும், துளசீதாசர் இராமாயணத்திலும்
காணப்படும்.                                                  115