4266. | கொஞ்சுறு கிளி நெடுங் குதலை கூடின, அஞ்சிறை அறுபத அளக ஓதிய, எஞ்சல் இல் குழையன, இடை நுடங்குவ - வஞ்சிகள் பொலிந்தன, மகளிர் மானவே. |
வஞ்சிகள் - வஞ்சிக் கொடிகள்; கொஞ்சுறு கிளி - கொஞ்சிப் பேசுகின்ற கிளிகளின்; நெடுங் குதலை கூடின - நீண்ட மதலைமொழி கள் (தம்மிடத்துப்) பொருந்தப் பெற்றனவாய்; அஞ்சிறை அறுபதம் - (தம்மிடம் மொய்க்கின்ற) அழகிய சிறகுகளை உடைய வண்டுகளாகிய; அளக ஓதிய - கூந்தலின் ஒழுங்கையுடையனவாய்; எஞ்சல் இல் குழை யன - குறைவில்லாத தளிர்களை உடையனவாய் (குறைவில்லாத குழை யெனும் காதணி உடையனவாய்); இடை நுடங்குவ - இடையில் ஒல்கி அசைவனவாய் (இடை, அசைவனவாய்); மகளிர் மான - மகளிரைப் போல; பொலிந்தன - விளங்கின. வஞ்சிக்கொடிகள் மகளிர் போல விளங்கின என்பதாம். வஞ்சிக்கொடியில் கிளிகளின் மொழி மகளிர் குதலை போன்றும், மலரில் மொய்க்கும் வண்டுகள் மகளிர் கூந்தல் போன்றும், அழகு குறையாத குழை (தளிர்) குழையணியாகவும் வஞ்சிக் கொடியின் நடுப்பகுதி துவளுதல் மகளிர் இடை துவளுதல் போலவும் இருந்தன. குழை - தளிர், காதணி என்று இருபொருள்பட நின்றது. இடை - நடுப்பகுதி, மகளிர்இடை என இரு பொருள்பட்டு நின்றது. எனவே, உருவகத் தையும் சிலேடையையும் உறுப்பாகக் கொண்ட உவமை அணியாகும். அறுபதம் - வண்டு, பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. குதலை - மகளிரின் எல்லாப் பருவத்திற்கும் கூறப்படும்மொழிநிலை. 119 |