4268. மழை படப் பொதுளிய
      மருதத் தாமரை
தழை படப் பேர் இலைப்
      புரையில் தங்குவ,
விழைபடு பெடையொடும்,
      மெள்ள, நள்ளிகள்,
புழை அடைத்து ஒடுங்கின,
      வச்சை மாக்கள்போல்.

     மழை படப் பொதுளிய - மழை பெய்ததால் செழித்த; மருதத் தாமரை
-
மருத நிலத்திற்குரிய தாமரை; தழை பட - செழித்து வளர; பேர் இலைப்
புரையில் தங்குவ -
(அவற்றின்) பெரிய இலையின் கீழ்த் தங்குவனவான;
நள்ளிகள் -
ஆண் நண்டுகள்; விழைபடு பெடையொ டும் - விருப்பம் மிக்க
தம் பெண் நண்டுகளுடனே; வச்சை மாக்கள் போல் - உலோபிகள் போல;
மெள்ள -
மெதுவாக; புழை அடைத்து - தம் வளையின் வாயிலைச்
சேற்றால் அடைத்துக் கொண்டு; ஒடுங்கின - அதன் உள்ளே ஒடுங்கிக்
கிடந்தன.

     இரவலர், நண்பர், விருந்தினர், சுற்றத்தினர் என எவரேனும் தம்
இல்லத்திற்கு வந்துவிடுவரோ என்று அஞ்சி உலோபிகள் தம் வீட்டுக்கதவை
அடைத்துக் கொண்டு தம் மனைவி மக்களுடன் உள்ளிருப்பர் அதுபோல
ஆண்நண்டுகள், தன் பெடைகளோடு தாம் வாழும் வளைகளின் வாயிலைச்
சேற்றால் அடைத்துக் கொண்டு உள்ளிருந்தன. நண்டுகளுக்கு உலோபிகள்
உவமை ஆயினர். உவமை அணி. முன்னர்ப் 'பெடை' எனக்கூறியதால்
'நள்ளி' என்னும் நண்டின் பொதுப் பெயர் ஆண்நண்டைக் குறித்து நின்றது.
மருதநிலத்திற்கே சிறப்புடையதாதலின் 'மருதத் தாமரை' என்றார்.  விலங்கு
போன்ற மனிதர் என்ற இழிவு தோன்ற 'வச்சை மாக்கள் போல' என்றார்.  121