4272.'  ''வெம்பு கண்டகர் விண்
      புக வேர் அறுத்து,
இம்பர் நல் அறம்
      செய்ய எடுத்த விற்
கொம்பும் உண்டு; அருங்
      கூற்றமும் உண்டு; உங்கள்
அம்பும் உண்டு'' என்று
      சொல்லு, நம் ஆணையே.

     வெம்புகண்டகர் - மனம் கொதிக்கும் கொடியவர்கள்; விண்புக வேர்
அறுத்து -
(போரில் மடிந்து) வீர சொர்க்கம் அடையும்படி (அவர்களை)
வேரொடு அழித்து; இம்பர் நல்லறம் செய்ய - இவ்வுலகில் முறையான
தருமத்தை நிலைநிறுத்தும் பொருட்டு; எடுத்த விற்கொம்பும் - (நாம்) கையில்
ஏந்திய வில் தடியும்; உண்டு - (நம்மிடம்) உள்ளது; அருங்கூற்றமும்
உண்டு-
(யாராலும் தடுக்கமுடியாத) இயமனும் இருக்கிறான்; உங்கள் அம்பும்
உண்டு-
(வானரங்களாகிய) உங்களைக் கொல்லக் கூடிய வாலியைக் கொன்ற
அம்பும்(எம்மிடம்) இருக்கின்றது; என்று நம் ஆணை - என்று நமது
கட்டளையாக; சொல்லு - (சுக்கிரீவனிடம்) சொல்வாய்.

     விராதன் முதலான அரக்கர்களையும் வாலியையும் கொன்ற வில்லும்
அம்பும் கொண்டே சுக்கிரீவனையும், அவனுடைய வானரப் படைகளையும்
இயமனுக்கு இரையாக்க முடியுமென்பதைச் சொல்லுமாறு இலக்குவனிடம்
இராமன் உரைத்தான் என்பது.  கண்டகர் - தீயோர். தீயோரை ஒறுத்து
நல்லறம் நாட்டுதல் ஆகிய அவதாரப்பாங்கு இங்கே புலப்படுவது காண்க. 4