4274. | ' ''ஊரும், ஆளும், அரசும், உம் சுற்றமும், நீரும் ஆளுதிரேஎனின், நேர்ந்த நாள் வாரும்; வாரலிர் ஆம் எனின், வானரப் பேரும் மாளும்'' எனும் பொருள் பேசுவாய். |
ஊரும் ஆளும் - (உங்கள்) நகரமான கிட்கிந்தையையும், குடி மக் களையும்; அரசும் உம் சுற்றமும் - அரசாட்சியையும் உங்களது உறவினர்களையும்; நீரும் ஆளுதிரே எனின் - நீங்களே அள விரும்பினால்; நேர்ந்த நாள் - (சீதையைத்) தேடுவதற்காக வர ஒப்புக்கொண்ட இக் கார்த்திகை மாதத்தில்; வாரும் - (உடனே புறப்பட்டு) வர வேண்டும்; வாரலிர் எனின் - (அவ்வாறு) வராமல் போவீரானால்; வானரம் பேரும் மாளும் - வானரம் என்னும் பெயரும் (இவ்வுலகில்) இல்லாது ஒழியும்; எனும் பொருள் பேசுவாய் - என்னும் உண்மையை (சுக்கிரீவன்) முதலானவரிடம் நீ உணர்த்துவாய். நீரும் - உம் இசை நிறை: அசை நிலையுமாம். 6 |