4278. | மாறு நின்ற மரனும், மலைகளும், நீறு சென்று நெடு நெறி நீங்கிட, வேறு சென்றனன்; மெய்ம்மையின் ஓங்கிடும் ஆறு சென்றவன் - ஆணையின் ஏகுவான். |
மெய்ம்மையின் ஓங்கிடும் ஆறு சென்றவன் - சத்தியத்தால் சிறக்கும் வழியில் இயங்குபவனாகிய இராமபிரானின்; ஆணையின் ஏகு வான் - கட்டளைப்படி செல்பவனாகிய இலக்குவன்; மாறுநின்ற மரனும் - குறுக்கே நின்ற மரங்களும்; மலைகளும் - மலைகளும்; நீறு சென்று - (தான் செல்லும் வேகத்தால்) தூளாகி; நெடுநெறி நீங்கிட - நெடிய வழியில் (நீண்ட தூரத்தில்) சென்று பரவும்படியாக; வேறு சென்றனன் - புதுவழி அமைத்துக்கொண்டு சென்றான். பழக்கப்பட்ட வழியன்றாதலின் 'வேறு சென்றனன்' என்றார். காற்றில் பறந்து பரவும் துகள் நெடுந்தொலைவு போகுமாதலின் 'நெடுநெறி' என்றார். 10 |