4279. | விண் உறத் தொடர் மேருவின் சீர் வரை மண் உறப் புக்கு அழுந்தின, மாதிரம்; கண் உறத் தெரிவுற்றது, கட்செவி - ஒண் நிறக் கழல் சேவடி ஊன்றலால். |
ஒண்நிறக் கழல் சேவடி - ஒளிமிக்க நிறமுள்ள வீரக்கழலை யணிந்த (இலக்குவனின்) பாதங்கள்; ஊன்றலால் - அழுந்துவதால்; விண்உறத்தொடர் - வானுலகத்தைத் தொடுமாறு வளர்ந்துள்ள; மேரு வின் சீர்வரை - மேருமலையின்(உயரத்தின்) எல்லையளவாக; மாதிரம் மண்உற - மலைகள் நிலத்திலே பொருந்த; புக்கு அழுந்தின - உள்ளே சென்று அழுந்தின; (அப்பொழுது)கட்செவி கண்உற - (பூமியைத் தாங்கும்) ஆதிசேடனாகிய பாம்பு கண்களுக்கு; தெரிவுற்றது - புலனாயிற்று. கட்செவி - பாம்பு; இங்கே ஆதிசேடனைக் குறித்தது. உயர்வு நவிற்சியணி. 11 |