4280. | வெம்பு கானிடைப் போகின்ற வேகத்தால், உம்பர் தோறும் மராமரத்து ஊடு செல் அம்பு போன்றனன், அன்று - அடல் வாலிதன் தம்பிமேல் செலும் மானவன் தம்பியே. |
அன்று - அப்பொழுது; அடல் வாலியின் - வலிமையுள்ள வாலியின்; தம்பிமேல் செலும் - தம்பியான சுக்கிரீவனிடம் செல்லுகின்ற; மானவன் தம்பி - மனுகுலத் தோன்றலாகிய இராமன் தம்பியான இலக்குவன்; வெம்பு கானிடை - வெப்பம் மிகுந்த காட்டிலே; போகின்ற வேகத்தால் - செல்லும் வேகத்தினால்; உம்பர் தோயும் - வானத்தை அளாவி நின்ற; மராமரத்து ஊடு செல் - ஏழு மராமரங்களின் இடையே துளைத்துச் சென்ற; அம்பு போன்றனன் - (இராம) பாணத்தை ஒத்திருந்தான். இராம பாணம் ஏழு மராமரங்களைத் துளைத்துச் சென்றதுபோல, இலக்குவன் தான் செல்லும் காட்டு வழியிலுள்ள மரங்களை அழித்துச் சென்றான் என்றபடி. உவமையணி, உம்பர் தோயும் மராமரம் - உயர்வு நவிற்சி. 12 |