4281. | மாடு வென்றி ஓர் மாதிர யானையின் சேடு சென்று கெடில், ஒரு திக்கின் மா நாடுகின்றதும், நண்ணிய கால் பிடித்து ஓடுகின்றதும், ஒத்துளன் ஆயினான். |
ஒரு திக்கின் மா - ஒரு திசை யானை; மாடு வென்றி - பக்கத்தி லுள்ள வெற்றி பொருந்திய; ஓர் மாதிர யானையின் - மற்றொரு திசை யானையினுடைய; சேடு சென்று - இளங்கன்று விலகிச் சென்று; கெடில் - வழி தவறிச் சென்று விட்டால்; நாடுகின்றதும் - (அதைத்) தேடுவதாய்; நண்ணிய கால்பிடித்து - (அக்கன்று) சென்ற அடிச்சுவடுகளைப் பின்பற்றி; ஓடுகின்றதும் - விரைந்து செல்வதை; ஒத்து உளன் ஆயினான் - (இலக்குவன்) ஒத்தவன் ஆனான். பக்கத்தில் நின்ற ஒரு திசை யானையின் கன்று விலகிச் சென்று காணாமற் போய் விட்ட போது அதனோடு நட்புக்கொண்ட வேறொரு திசை யானை அதனைத் தேடுவதற்காக அடிச்சுவடுகளைப் பின்பற்றி விரைந்து செல்லும். அவ்வாறு செல்லும் திசையானை போன்றவன் இலக்குவன் என்பது. 13 |