4282. | உருக் கொள் ஒண் கிரி ஒன்றின்நின்று ஒன்றினைப் பொருக்க எய்தினன், பொன் ஒளிர் மேனியான் - அருக்கன் மா உதயத்தின்நின்ற அத்தம் ஆம் பருப்பதத்தினை எய்திய பண்புபோல். |
அருக்கன் மா உதயத்தினின்று - சூரியன் பெருமை பொருந்திய உதயமலையிலிருந்து; அத்தம் ஆம் பருப்பதத்தினை- அத்தமன மலையை அடைந்தது போல; பொன் ஒளிர் மேனியான் - பொன்னி றத்தோடு விளங்கும் மேனியையுடைய இலக்குவன்; உருக்கொள் - பெரிய வடிவு கொண்ட; ஒள்கிரி ஒன்றினின்று - ஒளிமிக்க ஒரு மலையிலிருந்து (மாலியவான் மலை); ஒன்றினை - மற்றொரு மலையை (கிட்கிந்தையை); பொருக்க எய்தினன் - விரைவிலே சென்று சேர்ந்தான். இடையே தங்குதலும், தடங்கலும் இன்றி விரைந்து சென்று சேரும் இயல்பு சூரியனுக்கும், இலக்குவனுக்கும் பொருந்தும். சூரியன் உவமை, நிறத்திற்கும் மேனி ஒளிக்கும் ஆம். பொருக்க: விரைவுக் குறிப்பு. உதயகிரி - கிழக்கின் கண் உள்ள மலை; அத்தமனகிரி - மேற்கின் கண் உள்ள மலை; பருப்பதம் :மலை 14 |