வானரர் அங்கதனுக்குச் செய்தி அறிவித்தல்

4284. கண்ட வானரம்
      காலனைக் கண்டபோல்
மண்டி ஓடின; வாலி
      மகற்கு, 'அமர்
கொண்ட சீற்றத்து
      இளையோன் குறுகினான்,
சண்ட வேகத்தினால்'
      என்று, சாற்றலும்,

     கண்ட வானரம் - (கோபத்தோடு இலக்குன் வருவதைப்) பார்த்த
வானரங்கள்; காலனைக் கண்டபோல் - இயமனைக் கண்டது போல (அச்சம்
கொண்டு); வாலி மகற்கு - வாலி மைந்தனான அங்கதன் இருப்பிடம் நோக்கி;
மண்டி ஓடினர் -
நெருக்கி்க் கொண்டு ஓடி; அமர் கொண்ட சீற்றத்து -
போரினை மனங்கொண்ட கோபத்துடன்; இளையோன் சண்ட வேகத்தினால்
- இராமன் தம்பியான இலக்குவன் உக்கிரமான வேகத்தோடு; குறுகினான் -
வந்து சேர்ந்துள்ளான்; என்று சாற்றலும் - என்று சொன்ன அளவில்.

     கோபம் கொண்டவனாக மோதவரும் இலக்குவன் காணப்பட்டதால்
அவன் 'அமர்கொண்ட சீற்றத்து இளையோன்' எனப்பட்டான்.
மண்டியோடுதல் - ஒன்றன்மேல் ஒன்றாக விழுந்தடித்துக்கொண்டு ஓடுதல்.  16