4288. | சிந்துவாரத் தரு, நறை, தேக்கு, அகில், சந்தம், மா மயிற் சாயலர் தாழ் குழல் கந்த மா மலர்க் காடுகள், தாவிய மந்த மாருதம் வந்து உற, வைகுவான். |
சிந்துவாரத் தரு- கருநொச்சி மரம்; தேக்கு, அகில், சந்தம் - தேக்கு, அகில், சந்தன மரங்கள்; மா மயிற் சாயலர் - சிறந்த மயில் போன்ற சாயலையுடை பெண்களின்; தாழ்குழல் - நீண்ட கூந்தல்; கந்த மாமலர்க்காடுகள் - (கூந்தலில் சூடிய) மணமுள்ள மலர்களின் தொகுதி; (ஆகிய இவற்றில்); தாவிய மந்தமாருதம் - தழுவிய மென்காற்று; வந்து உற வைகுவான் - வந்து தன்மேல் வீசத் தங்குபவனும், கரு நொச்சி முதலியவற்றில் தோய்ந்து வருவதால் நறுமணம் கொண்ட மென்காற்றுத் தன்மேல் வீசச் சுக்கிரீவன் தங்கியுள்ளான் என்பது. மந்தமாருதம்: இளந்தென்றல். 20 |