4292. | 'எந்தை! கேள்: அவ் இராமற்கு இளையவன், சிந்தையுள் நெடுஞ் சீற்றம் திரு முகம் தந்து அளிப்ப, தடுப்ப அரும் வேகத்தன் வந்தனன்; உன் மனக் கருத்து யாது?' என்றான். |
எந்தை கேள் - என் தந்தையே! நான் சொல்வதைக் கேட்பாயாக! அவ் இராமற்கு இளையவன் - அந்த இராமனுக்குத் தம்பியான இலக்குவன்; சிந்தையுள் நெடுஞ்சீற்றம் - மனத்திற் படிந்துள்ள பெருங் கோபத்தை; திருமுகம் தந்து அளிப்ப - முகமானது எடுத்துக் காட்ட; தடுப்ப அரும் வேகத்தன் - (யாராலும்) தடுக்க முடியாத வேகத்தோடு; வந்தனன் - வந்து சேர்ந்துள்ளான்; உன் மனக் கருத்து யாது - உனது உள்ளக் கருத்து என்ன; என்றான் - என்று (சுக்கிரீவனிடம் அங்கதன்) கேட்டான். எந்தை -மரூஉ. 24 |