4293. | இனைய மாற்றம் இசைத்தனன் என்பது ஓர் நினைவு இலான், நெடுஞ் செல்வம் நெருக்கவும், நனை நறுந் துளி நஞ்சு மயக்கவும், தனை உணர்ந்திலன், மெல் அணைத் தங்கினான். |
நெடுஞ் செல்வம் நெருக்கவும் - அரசாட்சி என்னும் பெரிய செல்வம் மமதையைத் தந்தாலும்; நறு நனை துளி நஞ்சு மயக்கவும்- மணமுள்ள கள்ளின் துளியாகிய நஞ்சு, மயக்கத்தை அளித்ததாலும்; தனை உணர்ந்திலன் - தன்னை உணராமையால் (அச்சுக்கிரீவன் மெய்ம மறந்து); இனைய மாற்றம் இசைத்தனன் - அங்கதன் சொன்ன வார்த்தைகள் இன்னவையென்று; என்பது ஓர் நினைவு இலான் - புரிந்து கொள்ள இயலாத மன நிலையில்; மெல் அணித் தங்கினான் - மென்மையான படுக்கையில் (முன் போலவே) கிடந்தான். தன்னையுண்டவரை அறிவில்லாதவராக ஆக்குவதால் கள்ளை 'நஞ்சு' என்றார். 'எஞ்ஞான்றும், நஞ்சுண்பார் கள்ளுண்பவர்' (குறள்: 926). நெடுமை: பெருமை. நனி நறுந்துளி நஞ்சு - உருவகம். 25 |