அங்கதன் அனுமனுடன் தாரையின் கோயிலை அடைதல்

4295. மந்திரத் தனி மாருதி தன்னொடும்,
வெந் திறல் படை வீரர் விராய் வர,
அந்தரத்தின் வந்து, அன்னைதன் கோயிலை,
இந்திரற்கு மகன் மகன் எய்தினான்.

     இந்திரற்கு மகன் மகன் - இந்திரன் மைந்தனான வாலியின் மகனாகிய
அங்கதன்; மந்திரத் தனி மாருதி தன்னொடும் - ஆலோசனை யில் வல்ல
ஒப்பற்ற வாயு மகனான அனுமனோடு; வெந்திறல் படை வீரர் - மிக்க
வலிமையுள்ள வீரர்கள்; விராய் வர - திரண்டு (தன்னுடன்) வர; அந்தரத்தின்
வந்து -
(சுக்கிரீவனது அரண்மனையிலிருந்து) வெளிப்போந்து; அன்னைதன்
கோயிலை -
(தன்) தாயான தாரையின் மாளிகையை; எய்தினான் -
அடைந்தான்.

     இந்திரற்கு மகன் மகன் -இந்திரனுக்குப் பேரன்; அங்கதன் அந்தரத்தின்
வந்து - மனக் கலக்கத்தோடு வந்து; வான் வழியாகத் தாவி வந்து - என்றும்
உரைக்கலாம்.  அந்தரம்: வெளிப்புறம், மனக்கலக்கம்.                 27