தாரையின் பேச்சு

4296. எய்தி, 'மேல் செயத்தக்கது என்?' என்றலும்,
'செய்திர், செய்தற்கு அரு நெடுந் தீயன;
நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்;
உய்திர் போலும், உதவி கொன்றீர்?' எனா,

     எய்தி - (அங்கதன் தாரையை அடைந்து); மேல் செயத் தக்கது என் -
இனி நாம் செய்யத்தக்க செயல் என்ன; என்றலும் - என்று அவளை
வினாவிய அளவில்; செய்தற்கு அரு - (அவள் அவ்வானரர்களை நோக்கி)
செய்யத் தகாத; நெடுந்தீயன - பெரிய தீச் செயல்களை; நொய்தில் செய்திர்
-
எளிதிலே செய்துவிட்டீர்கள்; அன்னவை நீக்கவும் - அச் செயல்களால்
வரும் கேடுகளை எளிதில் நீக்கிக் கொள்ளவும்; நோக்குதிர் - வழி
தேடுகிறீர்கள்; உதவி கொன்றீர் - செய்ந்நன்றி மறந்தவர்களான நீங்கள்;
உய்திர் போலும் -
தப்பி வாழ்வீர்கள் போலும்!எனா - என்று சொல்லி. . .

     விளம்புகின்றாள் என அடுத்த கவியோடு முடியும்.  'உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு' (குறள் 110), உய்ய மாட்டீர் என்பது
வலியுறுத்தப்பட்டது.  நெடுந்தீயன - மிக்க கொடியன.  நோக்குதல் -
வழிதேடுதல், ஆலோசித்தல், 'செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென் றறம்
பாடிற்றே' என்ற பழம் பாடல் கருத்தினை நினைவு கூர்க. (புறம் 34)     28