4297. மீட்டும் ஒன்று
      விளம்புகின்றாள்: ' ''படை
கூட்டும்'' என்று, உமைக்
      கொற்றவன், ''கூறிய
நாள் திறம்பின், உம்
      நாள் திறம்பும்'' எனக்
கேட்டிலீர்; இனிக்
      காண்டிர்; கிடைத்திரால்.

     மீட்டும் ஒன்று - மேலும் (தாரை) ஒரு வார்த்தை; விளம்புகின்றாள் -
சொல்லுகின்றாள்; படை கூட்டும் என்று - சேனைகளைச் சேர்த்துக் கொண்டு
வாருங்கள் என்று; உமைக் கொற்றவன் கூறிய - உங்களைப் பார்த்து வெற்றி
வீரனான இராமன் குறிப்பிட்ட; நாள் திறம்பின் - தவணை நாள்
தவறிவிட்டால்; உம் நாள் திறம்பும் - உங்களுடைய வாழ்நாள் அழிந்து
போகும்; எனக் கேட்டிலீர் - என்று (நான் பலமுறை) சொல்லியும் (அதற்கு
ஏற்றவாறு) நடக்காமல் போய் வீட்டீர்கள்; இனிக் காண்டிர் - இனிமேல்
(அதன் விளைவை) அனுபவத்தால் தெரிந்து கொள்வீர்கள்; கிடைத்திர் -
(இப்பொழுது குற்றத்திலே) அகப்பட்டுக் கொண்டீர்கள்.

     நாள் - வாழ்நாள்.  இப்பாடலால் தாரை முன்பே பலமுறை
எச்சரித்திருக்கிறாள் என்பதுபுலப்படுகிறது.                         29