4298.'வாலி ஆர் உயிர் காலனும் வாங்க, விற்
கோலி, வாலிய செல்வம் கொடுத்தவர்
போலுமால், உம் புறத்து இருப்பார்! இது
சாலுமால், உங்கள் தன்மையினோர்க்கு எலாம்.

     வாலி ஆர் உயிர் - வாலியின் அரிய உயிரை; காலனும் வாங்க -
யமனும் கவர்ந்து செல்லுமாறு; விற்கோலி - வில்லை வளைத்து (அம்பு
தொடுத்து); வாலிய செல்வம் - புகழ் மிக்க அரசாட்சிச் செல் வத்தை;
கொடுத்தவர் -
(உங்களுக்குத்) தந்தவர்களாகிய இராமனும் இலக்குவனுமா;
உம் புறத்து இருப்பார் போலும் -
கிட்கிந்தைக்கு வெளியே சும்மா
இருப்பார்கள்; இது உங்கள் தன்மையினோர்க்கு எலாம் சாலும் - (பேருதவி
செய்தவர்களை) இப்படிப் புறக்கணிப்பது உங்களைப் போன்றவர்களுக்குப்
பொருந்தியது தான்.

     'பேருதவி செய்தவரும், பேராற்றலுடையவருமானவரை எவ்வளவு
மேலாகப் போற்ற வேண்டும்? அதைவிட்டு அவரிடத்திலும் தவறாக நடந்தால்
பொறுத்துக் கொண்டிருப்பார்களா?'' என்றாள் தாரை.  ''நீங்கள் தவறு
செய்தமையால் அவர்கள் சினம் பொங்கப் பெற்று நீங்கள் அழியுமாறு மோதப்
போகிறார்கள்; இந்தத் தண்டனை உங்களுக்குப் பொருத்தமானதே'' என்பதாம்.
போலும் - ஒப்பில் போலி.  வாலிய செல்வம் - வாலியினுடைய செல்வம்
என்றும் பொருள் கொள்ளலாம்.

     வாலியார் - இதனை உயர்வுப் பன்மையாகவும் கொள்ள இடமுண்டு. 30