வாயிலைத் தாளிட்டு வானரங்கள் போருக்குத் தயாராதல்

4301.கோள் உறுத்தற்கு அரிய குரக்கினம்,
நீள் எழுத் தொடரும் நெடு வாயிலைத்
தாள்உறுத்தி, தட வரை தந்தன
மூளுறுத்தி அடுக்கின, மொய்ம்பினால்,

     கோள் உறுத்தற்கு - தடுத்து நிறுத்துவதற்கு; அரிய குரக்கினம் -
அரிய (வலிமையுள்ள) குரங்குகளின் கூட்டம்; நீள் எழுத் தொடரும் -
நீளமான உழலை மரக்கட்டைகளை உடைய; நெடு வாயிலை - பெரிய
நகரத்தின் வாயிற் கதவை; தாள் உறுத்தி - உள்ளே தாளிட்டு;
மொய்ம்பினால் -
வலிமையால்; தடவரை தந்தன மூளுறுத்தி - பெரிய
பாறைகளைக் கொண்டு வந்து சேர்த்து; அடுக்கின - (ஒன்றன் மேல் ஒன்றாக
அக் கதவோடு சார்த்தி உள்ளே) அடுக்கி  வைத்தன.

     குரங்குகள், கதவை எளிதில் திறக்க முடியாதபடி பெரிய பாறைகளைக்
கொண்டுவந்து அடுக்கி வைத்தன என்பது.  குரங்குகள் மூன்று வகைப்
பாதுகாப்பைச் செய்தன. 1. வாயிற் கதவைச் சாத்தி உள்ளே தாளிடுதல்.  2.
உழலை பாய்ச்சுதல்.  3. பெரும் பாறைகளை அடுக்கி வைத்தல்.  வாயில் -
ஆகுபெயர். தாள் உறுத்துதல் - தாழ்ககோலையிறுக்குதல்.            33