4302. | சிக்குறக் கடை சேமித்த செய்கைய, தொக்குறுத்த மரத்த, துவன்றின; 'புக்கு உறுக்கிப் புடைத்தும்' என, புறம் மிக்கு இறுத்தன; வெற்பும் இறுத்தன. |
கடை சிக்குற - (இவ்வாறு) நகர வாயிலை உறுதியாக; சேமித்த செய்கைய - பத்திரப்படுத்திக் கொண்ட செய்கையுடைய வானரங்கள்; புக்கு உறுக்கி - (இவ் வாயிலைக் கடந்து இலக்குவன் வந்தால்) எதிரே சென்று (அவனை) அச்சுறுத்தி (அதட்டி); புடைத்தும் என - நையப் புடைப்போம் என்று எண்ணி; தொக்குறுத்த மரத்த - (முறித்துக் கையில்) எடுத்துக் கொண்ட மரங்களையுடையனவும்; வெற்பும் இறுத்தன - பெரிய பாறைகளையும் பேர்த்து எடுத்துக் கொண்டனவுமாம்; துவன்றின - (திரண்டு) நெருங்கி; புறம் மிக்கு இறுத்தன - மதில் பக்கத்தில் கூட்டமாகக் கூடி நின்றன. சேமித்தல் - காவல் செய்து வைத்தல். தொக்குறுத்தல் - தொகுத்தல், ஈட்டுதல். இறுத்தல் - தங்குதல். 34 |