இலக்குவன் சினத்தின் விளைவு

4303.'காக்கவோ கருத்து?' என்று, கதத்தினால்
பூக்க மூரல், புரவலர் புங்கவன்,
தாக்கணங்கு உறை தாமரைத் தாளினால்,
நூக்கினான் அக் கதவினை, நொய்தினின்.

     (வானரங்கள் நகர வாயிலை அடைத்ததைப் பார்த்து) புரவலர்
புங்கவன்-
அரசரில் மேம்பட்டவனான இலக்குவன்; காக்கவோ கருத்து
என்று -
(என்னிடமிருந்து தம்மைப்) பாதுகாத்துக் கொள்ளவோ
(இவர்கள்) கருதியது என்று எண்ணி; கதத்தினால் மூரல் பூக்க -
கடுங்கோபத்தால் எள்ளற் சிரிப்புத் தோன்ற; தாக்கணங்கு உறை - திருமகள்
வசிக்கின்ற; தாமரைத் தாளினால் - செந்தாமரை போன்ற தன் திருவடியால்;
அக் கதவினை -
அவ் வாயிற் கதவை; நொய்தி னில் நூக்கினான் - மிக
எளிமையாகத் தள்ளினான்.

     இலக்குவனின் திருவடிக்கு இலக்குமி உறையும் தாமரை உவமையாகியது.
அணங்கு - மகளிரில் சிறந்தவர், பெண் தெய்வம் 'அறம் செய்வோர்பால்
அருளினால் பற்றியிருக்கும் திருமகள்' என்று தாக்கு அணங்கு என்பதற்குக்
கம்பன் கழகப் பதிப்பு விளக்கம் தருகிறது.  தாக்குதல் - பற்றியிருத்தல்.   35