குரங்குகள் அஞ்சி ஓடுதல்

4305. நொய்தின் நோன் கதவும், முது வாயிலும்,
செய்த கல் மதிலும், திசை, யோசனை
ஐ - இரண்டின் அளவு அடி அற்று உக,
வெய்தின் நின்ற குரங்கும், வெருக் கொளா,

     நோன் கதவும் - வலிய அக் கதவும்; முது வாயிலும் - பழமையான
அந்த நகரவாயிலும்; கல் செய்த மதிலும் - கற்களால் எழுப்பப் பட்ட
மதிலும்; நொய்தின் அடி அற்று - எளிதிலே கட்டுக் குலைந்து; திசை
ஐஇரண்டு யோசனையின் அளவு -
எல்லாத் திசைகளிலும் பத்து யோசனை
தூரம்; உக குரங்கும் - சிதறியதால் (போர் செய்ய நின்ற) வானரங்களும்;
வெருக் கொளா -
அச்சங் கொண்டு; வெய்தின் நின்ற -  (மனங்
கொதித்துத்)  தவித்தன.

     வெய்தின் நிற்றல்: கொடிய துன்பம் அடைதல்.  யோசனை - ஓர்
எல்லையளவு. 3, 71/2, கல் தொலைவு என்பர்.  வெருங் கொளா - செய்யா
என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம்.  நோன்மை: வலிமை. 37