4308. | வானரங்கள் வெருவி, மலை ஒரீஇ, கான் ஒருங்கு படர, அக் கார் வரை, மீ நெருங்கிய வானகம், மீன் எலாம் போன பின், பொலிவு அற்றது போன்றதே. |
வானரங்கள் வெருவி - குரங்குகள் இவ்வாறு அஞ்சி; மலை ஒரீஇ - அந்தக் கிட்கிந்தை மலையை விட்டு நீங்கி; கான் ஒருங்கு படர - காடுகளில் ஒன்றாகச் சென்று சேர்ந்து விட்டதால்; அக் கார் வரை - மேகங்கள் சூழ்ந்த அந்தக் கிட்கிந்தை மலையானது; மீன் நெருங்கிய வானகம் - நட்சத்திரங்கள் நிறைந்த வானம்; மீன் எலாம் போனபின் - அந் நடசத்திரங்கள் எல்லாம் நீங்கிய பின்பு; பொலிவு அற்றது - பொலிவு இழந்த தன்மையை; போன்றது- ஒத்திருந்தது. கார் வரை - பெரிய மலை என்றும் பொருள் உரைக்கலாம். கிட்கிந்தை மலை நட்சத்திரங்கள் நீங்கப் பெற்ற வானத்தைப் போலப் பொலிவற்றிருந்தது. - உவமையணி. 40 |