4312. உரைசெய் வானர வீரர் உவந்து உறை
அரசர் வீதி கடந்து, அகன் கோயிலைப்
புரசை யானை அன்னான் புகலோடும், அவ்
விரை செய் வார் குழல் தாரை விலக்கினாள்.

     உரை செய் வானர வீரர் - சிறப்பித்துச் சொல்லப் படுகின்ற வானர
வீரர்கள்; உவந்து உறை - மகிழ்ச்சியோடு வசிக்கும் இடமான; அரசர் வீதி
கடந்து -
இராச வீதியைக் கடந்து சென்று; புரசை யானை அன்னான் -
கழுத்திடு கயிற்றையுடைய யானையைப்  போன்ற இலக்குவன்; அகன்
கோயிலை -
அகன்றுள்ள சுக்கிரீவனது அரண்மனைக்குள்; புகலோடும் -
நுழைகின்ற சமயத்தில்; அவ் விரை செய்வார் குழல் தாரை - மணத்தைப்
பரப்பும் நீண்ட கூந்தலையுடைய அத் தாரையானவள்; விலக்கினாள் -
(இலக்குவனை) வழிமறித்தாள்.

     யானை மதங்கொண்டு சீறினாலும் கழுத்தின் புரசைக் கயிறு பற்றி அதன்
மீது ஏறினவர் உயிர் பிழைத்தல் கூடும்.  அவ்வாறே இலக்குவன் சினத்தால்
சீறினாலம் தருமத்திற்குக் கட்டுப்படும் இயல்புடையவனாதல் பற்றி, அவன்
சினத்திற்கு இலக்கானவர் உயிர் பிழைத்தல் கூடும் என்னும் கருத்தில் 'புரசை
யானையனான்' என்றார்.

     மங்கலம் இழந்த தாரையை 'விரைசெய் வார்குழலாள்' என்று குறித்தது
ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது.  மணம் (விரை) கொண்ட கூந்தல் என்றதில்,
மணம் ஒழுக்கச் சிறப்பால் வருவது.  கற்புடை மகளிர் மேனியேயன்றிக்
கூந்தலும் நன்மணம் கமழ்வது மரபு.                               44