4314. | வில்லும், வாளும், அணிதொறும் மின்னிட, மெல் அரிக் குரல் மேகலை ஆர்த்து எழ, பல் வகைப் புருவக் கொடி பம்பிட, வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே. |
அணிதொறும் - அணிந்துள்ள அணிகலன்கள் தோறும்; வில்லும் வாளும் மின்னிட - வில்லும் வாளும் ஒளிவிடவும்; மெல் அரிக் குரல் - மெல்லிய பரல்களையுடைய காற்சிலம்புகளின் ஒலியும்; மேகலை ஆர்த்து எழ - இடையணியான மேகலை (பறையொலிபோல) ஆரவாரித்து எழவும்; பல்வகைப் புருவக் கொடி - பலவகைப்பட்ட புருவங்களாகிய கொடிகள்; பம்பிட - நிறைந்திருக்கவும்; வல்லி ஆயம் - மகளிர் கூட்டமாகிய சேனை; வலத்தினில் வந்தது - வலிமையோடு (இலக்குவனை) வளைத்துக் கொண்டது. மகளிர் கூட்டம் இலக்குவனைச் சூழ்ந்து வழிமறித்ததை, ஒரு சேனை வந்து சூழ்ந்ததாக வருணித்தார். மகளிர் இடம் பெயர்ந்து செல்லும்போது அவர்களின் சிலம்பும் மேகலையுமாகிய அணிகள் ஒலிப்பதைப் போர்ப் பறைகளின் ஒலியாக உவமித்தார். அரி: சிலம்பின் உட்பரல். புருவக் கொடி - கொடி போன்ற புருவம். கொடி - புருவக்கொடியையும், போர்க் கொடியையும் குறித்தது. கொடி: படர்கொடியும் துவசமும். சிலேடையை அங்கமாகக் கொண்ட உருவக அணி. மெல்லரி - பண்புத் தொகையன்மொழி (சிலம்பு) வல்லி - (பெண்) உவமையாகுபெயர். 46 |