இலக்குவன் மகளிரைப் பார்க்க அஞ்சுதல் ஆசிரிய விருத்தம் 4315. | ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குல் ஆம் தடந் தேர் சுற்ற, வேற் கண் வில் புருவம போர்ப்ப மெல்லியர் வளைந்தபோது, பேர்க்க அருஞ் சீற்றம் பேர, முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால், பார்க்கவும் அஞ்சினான், அப் பனையினும் பெரிய தோளன். |
ஆர்க்கும் நூபுரம் பேரி - ஆரவாரிக்கின்ற காற் சிலம்புகள் பல வகைப் பேரிகைகளாக முழங்க; அல்குல் ஆம் தடந்தேர் - அல்குலாகிய பெரிய தேர்; சுற்ற - கவிந்து கொள்ள; வேற்கண் - கண்கள் வேற் படைகளாகவும்; வெம் புருவப் போர்வில் - கொடிய புருவங்கள் போர் செய்யும் விற்படைகளாகவும் (அமைய); மெல்லியர் வளைந்தபோது - மகளிரது சேனை சூழ்ந்துகொண்ட பொழுது; அப் பனையினும் உயர்ந்த தோளான் - பனையை விட நெடிய தோள்களையுடைய அந்த இலக்குவன்; பேர்க்க அரும் - (யாராலும்) மாற்றமுடியாத; சீற்றம் பேர - கோபம் தணிய; முகம் பெயர்ந்து - முகத்தை ஒரு புறமாகத் திருப்பிக் கொண்டு; ஓதுங்கிற்று அல்லால் - ஒதுங்கி நின்றதேயல்லாமல்; பார்க்கவும் அஞ்சினான் - (அப் பெண்களைக்) கண்ணால் பார்ப்பதற்கும் அச்சமுற்றான். மகளிர் நேர்பட்ட மாத்திரத்தில் இலக்குவனது முகம் சினம் நீங்கி இயல்பாக ஆனமை தோன்ற 'முகம் பெயர்ந்து' எனத் தன்வினையால் கூறினார். முதல் இரண்டடிகள் - உருவக அணி. 47 |