4317. | 'அந்தம் இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி, இந்திரன் முதலினோரால் எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே? மைந்த! நின் பாதம் கொண்டு எம் மனை வரப் பெற்று, வாழ்ந்தேம்; உய்ந்தனம்; வினையும் தீர்ந்தேம்; உறுதி வேறு இதனின் உண்டோ? |
மைந்த - வீரனே; அந்தமில் காலம் நோற்ற ஆற்றல் - அளவில் லாத காலம் தவம் செய்த சிறப்பால் நாங்கள் பெற்ற பயனாகும் நீ வந்தது; உண்டாயின் அன்றி - அதுவல்லாமல்; இந்திரன் முதலினோரால் - இந்திரன் முதலானவர்களாலும்; எய்தலாம் இயல்பிற்று அன்றே - பெறத்தக்க தன்மையுடையதல்லவே; உனது வருகை (அவ்வாறு இருக்க); நின் பாதம் கொண்டு - உன் திருவடிகளை படிய; எம் மனை வரப் பெற்று - எங்கள் இல்லத்திற்கு நீ வந்ததால்; வாழ்ந்தேம் - (நாங்கள்)மேம்பட்டோம்; (ஆகவே) வினையும் - தீவினைகள் அனைத்தும்; தீர்ந்தேம் உய்ந்தனம் - விட்டு நீங்க உயர்கதி அடைந்தோம்; இதனின் உறுதி - இதைவிட (நாங்கள்) அடையக் கூடிய நற்பயன்; வேறு உண்டோ - வேறு உள்ளதோ? (இல்லை) அளவற்ற காலம் தவம் செய்த சிறப்பால் அல்லாமல் உனது வருகை இந்திரன் முதலானவர்களும் அடையத்தகக தன்மையுடையதோ? அவ்வாறிருக்க நீ எம் மனைக்கு வரப் பெற்றது அளவில்லாத காலம் நாங்கள் தவம் செய்த பயனாகும். அதனால் நாங்கள் உயர்கதி அடைந்தோம் என்றாள் தாரை என்பது. நோற்றல்: தவம் புரிதல். பாதம் கொண்டு: 'கொண்டு' - மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு. 49 |