4318.'வெய்தின் நீ வருதல் நோக்கி,
      வெருவுறும் சேனை, வீர!
செய்திதான் உணர்கிலாது; திருவுளம்
      தெரித்தி' என்றார்;
'ஐய! நீ ஆழி வேந்தன்
     அடி இணை பிரிகலாதாய்;
எய்தியது என்னை?' என்றாள்,
      இசையினும் இனிய சொல்லாள்.

     இசையினும் - இசையைக் காட்டிலும்; இனிய சொல்லாள் -
இனிமையான சொற்களையுடைய தாரை; வீர! நீ வெய்தின் - வீரனே நீ
சீற்றத்தோடு; வருதல் நோக்கி - வருவதைப் பார்த்து; சேனை செய்தி தான்
உணர்கிலாது -
(இந்த) வானர சேனை (நீ) வருகின்ற காரணத்தை
(இன்னதென்று) அறியாமல்; வெருவுறும் - அஞ்சும்; திருவுளம் தெரித்தி -
(அதன் அச்சம் நீக்குமாறு) உனது மனக் கருத்தை அறிந்து சொல்வாய்;
என்றார் -
என்று சொன்னார்கள்; ஐய! ஆழி வேந்தன் - ஐயனே!
ஆணைச் சக்கரத்தைச் செலுத்தும் மன்னனான இராமனின்; அடி இணை -
திருவடிகளை; பிரிகலாதாய் நீ - எப் பொழுதும் பிரியாது உடன்
தங்கியிருப்பவனாகிய நீ; எய்தியது என்னை - இங்குத் தனியே வந்த
செயல் என்ன என்று கேட்டாள்.

     'வீரனே! நீ கோபத்தோடு வருவதை அறிந்த காரணம் புரியாது
வானரசேனை அஞ்சிக் கலங்கியது; இராமனை என்றும் பிரியாத நீ இன்று
தனியே பிரிந்த வந்த காரணம் என்ன' என்று தாரை வினவினாள்.       50