இலக்குவன் தன் தாயரை நினைந்து நைதல் 4319. | 'ஆர் கொலோ உரை செய்தார்?' என்று அருள் வர, சீற்றம் அஃக, பார் குலாம் முழு வெண்திங்கள், பகல் வந்த படிவம் போலும் ஏர் குலாம் முகத்தினாளை, இறை முகம் எடுத்து நோக்கி, தார் குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான். |
தார்குலாம் - மலர்களால் தொடுக்கப்பெற்ற; அலங்கல் மார்பன் - மாலையை அணிந்துள்ள மார்புடைய இலக்குவன்; அருள் வர - (அவ் வார்த்தையைக் கேட்ட அளவில்) கருணை தோன்ற; சீற்றம் அஃக- கோபம் குறைந்தவனாகி; உரை செய்தார் - (இவ் வார்த்தையை இங்கு)ச் சொன்னவர் யாரோ என்று அறியக் கருதி; குலாம் முழு வெண் திங்கள் - விளங்கும் வெண்மையான முழுநிலவு; பகல் பார் வந்த - பகல் வேளையில் பூமிக்கு வந்த; படிவம் போலும் - தோற்றத்தைப் போன்ற; ஏர் குலாம் முகத்தினாளை - அழகு விளங்கும் முகத்தையுடைய தாரையை; இறை முகம் எடுத்து நோக்கி - சற்றே தனது முகத்தைத் தூக்கி நிமிர்ந்து பார்த்து; தாயரை நினைந்து - சுமித்திரை முதலிய தாயரை நினைவில் கொண்டு; நைந்தான் - வருந்தினான். பேரழகு வாய்ந்தவளாக விளங்கி அரசனின் மனைவியாய் நெடுங்காலம் வாழ்ந்து பின்பு அம் மணவாளனை இழந்து கைம்பெண்ணாகிக் கண்டவர் இரங்கத் தக்க நிலைமையை அடைந்தது குறித்துத் தாரையைக் கண்டவுடன் தன் தாயர் நினைவிற்கு வந்தமையால் இலக்குவன் வருந்தினான் என்றார். பகலில் வந்த சந்திரன் போன்ற முகத்தை 'ஏர் குலாம் முகம்' என்று சிறப்பித்தது கருதத்தக்கது. இந்த (ஏர்) அழகு ஒழுக்கச் சீர்மையால் வந்தது. திங்கள் பகல் வந்த படிவம் போலும் - இல்பொருள்உவமையணி. 51 |