இலக்குவன் தாரையிடம் உரைத்தது 4321. | 'இனையர் ஆம், என்னை ஈன்ற இருவரும்' என்ன வந்த நினைவினால் அயர்ப்புச் சென்ற நெஞ்சினன், நெடிது நின்றான்; 'வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும்' என்று, அப் புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான்; |
என்னை ஈன்ற இருவரும் - என்னைப் பெற்றெடுத்த தாய்மார் இருவரும்; இனையர் என்ன - இத் தன்மையராகவே இருப்பார்கள் என்று; வந்த நினைவினால் - மனத்தில் தோன்றிய நினைவால்; அயர்ப்புச் சென்ற- வாட்டம் மிக்க; நெஞ்சினன் - மனத்தையுடைய வனாய்; நெடிது நின்றான்- நீண்ட நேரம் ஒன்றும் தோன்றாமல் அந்த இலக்குவன் திகைத்து நின்றான்; வினவினாட்கு எதிர் - (தன்னிடம்) கேள்வி கேட்டவளுக்கு மறுமொழியாக; ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் - ஒரு வார்த்தை விடையாகச்சொல்லவும் வேண்டும்; என்று - என்று கருதி; அப் புனை குழலாட்கு - அழகிய கூந்தலையுடைய அத் தாரையை நோக்கி; வந்த காரியம் - வந்த செயல் இன்ன தென்று; புகல்வது ஆனான் - சொல்லலானான். இலக்குவன் தன் தாயரைப் பற்றிய நினைவால் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தான்; பின்பு தன்னை வினவியவளுக்கு விடையளிக்காமல் இருப்பது தகுதியாகாது என்று தான் வந்த செயலைக் கூற முற்பட்டான் என்பது. தாயர் இருவர்; தன் தாயான சுமித்திரையும், இராமன் தாயான கோசலையும். 53 |