தாரையின் மறுமொழி

4323.சீறுவாய்அல்லை - ஐய! -
      சிறியவர் தீமை செய்தால்,
ஆறுவாய்; நீ அலால், மற்று
     ஆர் உளர்? அயர்ந்தான் அல்லன்;
வேறு வேறு உலகம் எங்கும்
      தூதரை விடுத்து, அவ் எல்லை
ஊறுமா நோக்கித் தாழ்த்தான்; உதவி
      மாறு உதவி உண்டோ?

     ஐய! சீறுவாய் அல்லை - ஐயனே! கோபப்படாமல் இருப்பாயாக;
சிறியவர் தீமை செய்தால் -
(அறிவு முதலியவற்றால் சிறியவர்கள்) தீமைகள்
செய்தால்; ஆறுவாய் - பெரியவனான நீ பொறுத்துக் கோபத்தைத் தணித்துக்
கொள்வாயாக; நீ அலால் மற்று ஆர் உளர் - (அவ்வாறு இருப்பதற்கு)
உன்னைத் தவிர வேறு யார்தான் இருக்கின்றார்கள்?அயர்ந்தான் அல்லன் -
சுக்கிரீவன் தான் சொன்ன சொல்லில் தளர்ந்து விடவில்லை; உலகம் எங்கும்
-
(வானர சேனை களைத் திரட்ட) உலகத்தின் எல்லா இடங்களிலும்; வேறு
வேறு தூதரை -
தனித் தனியே வானரத் தூதர்களை; விடுத்து -
அனுப்பிவைத்து; அவ் எல்லை - அந்த இடங்களிலிருந்து; ஊறுமா நோக்கி
-
அச் சேனைகள் வந்து சேர்வதை எதிர்பார்த்துக்கொண்டு; தாழ்த்தான் -
தாமதித்திருக்கின்றான்; உதவி மாறு உதவி - (நீங்கள் அச் சுக்கிரீ வனுக்குச்)
செய்த உதவிக்குக் கைம்மாறு ஒன்று; உண்டோ - செய்வ தற்கு உள்ளதோ
(இல்லை).

     சிறியவர் தீமை செய்தால் அதைப் பொறுப்பது பெரியவர் கடனாகும்.
சுக்கிரீவன் செல்வ வாழ்க்கை முதலியவற்றால் மயங்கியுள்ளான் என்று
கருதுமாறு இருந்தாலும், அவன் உங்களது உதவியை மறக்கவில்லை;
அங்கங்கே தூதரை அனுப்பி வானர சேனையின் வருகையை
எதிர்பார்த்துள்ளான்; அதனால் தாமதித்து இருக்கின்றான் என்று தாரை
சொன்னாள்.  உதவி மாறு உதவி: 'செய்யா மற் செய்த உதவி', 'காலத்தினாற்
செய்த நன்றி' ஊறு: உறுதல் - முன்னிலை நீண்டது.  ஊறுமா றுகர ஈறு
குறைந்தது.                                                    55