4324.'ஆயிர கோடி தூதர், அரிக்
      கணம் அழைக்க, ஆணை
போயினர்'; புகுதும் நாளும்
     புகுந்தது; புகல் புக்கோர்க்குத்
தாயினும் நல்ல நீரே
      தணிதிரால்; தருமம் அஃதால்;
தீயன செய்யார் ஆயின், யாவரே
      செறுநர் ஆவார்?

     ஆயிர கோடி தூதர் - ஆயிரங் கோடியளவுள்ள எண்ணற்ற தூதர்கள்;
அரிக் கணம் அழைப்ப -
வானரங்களின் கூட்டத்தை அழைத்து வரும்
பொருட்டு; ஆணை போயினர் - (சுக்கிரீவன்) கட்ட ளைப்படி (உலகெங்கும்)
போயிருக்கின்றார்கள்; புகுதும் நாளும் புகுந்தது - (அவ் வானர சேனையும்)
வந்துசேர வேண்டிய காலமும் நெருங்கியது; புகல் புக்கோர்க்கு - சரணம்
அடைந்தவர்களுக்கு; தாயினும் இனிய நீரே - பெற்ற தாயைக் காட்டிலும்
அன்பு காட்டும் நீங்களே; தணிதிர் - கோபத்தைத் தணிப்பீராக; அஃது
தருமம் -
அவ்வாறு பொறுத்தருளுவதே தருமமாகும்; தீயன
செய்யாராயின் -
ஒருவர் தீய செயல்களைச் செய்யவில்லையானால்;
செறுநர் ஆவார் யாவரே - தண்டிப்பதற்குரியவர் எவரோ? ஒருவரும்
இல்லையென்றபடி.

     ஆல் : இரண்டும் அசை.  சுக்கிரீவன் வானர சேனையை வரவழைக்க
வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துள்ளான்; அச்சேனை வருங் காலமும்
நெருங்கிவிட்டது; ஒருகால் அவன் செய்ந்நன்றி மறந்து விட்டான் என்று
தோன்றினாலும், உம்மைச் சரணடைந்தவர்க்குத் தாயினும் இனிய நீங்கள்
அன்னவனைப் பொறுத் தருளுவவத தருமம் என்றாள்தாரை.          56